மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 31.7.2013
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்குபவை பெட்ரோல் மற்றும் டீசல் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, “அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி”, “சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு”, “நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்”, போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றை திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டி உயர்த்துவது என்பது “வேலியே பயிரை மேய்வது போல்” என்ற பழமொழிக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை அரசே சீரழிப்பது போல்உள்ளது.
ஜூலை மாதம் 2-ஆம் தேதியன்று டீசல் விலையை லிட்டருக்கு 50 காசாகவும், 15-ஆம் தேதி அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 55 காசாகவும் உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்து இருந்தாலும், சர்வதேச அளவிலான பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 70 காசு உயர்த்தியுள்ளது. இதே போன்று, மாதாமாதம் சிறிதளவு டீசல் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி டீசல் விலையையும் இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது சாமானிய மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
இந்த விலை உயர்வின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும். டீசல் விலை உயர்வு எல்லா வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாவதுடன் சாதாரண மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள்; சந்தைக்கு தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் சிறு வியாபாரிகள்; விற்பனைப் பொருட்களை பல்வேறு இடங்களிலிருந்துகொண்டு வருவோர்; வாடகை வாகனங்களில் பயணிப்போர்; இரு சக்கர வாகனம் வைத்திருப்போர், என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.இதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலையும் வாகனக் கட்டணமும் கணிசமாக உயரும். உற்பத்திச் செலவு உயர்வதால் எல்லாப் பொருட்களின் விலையும் உயரும். மக்களின் வாழ்வைப் பற்றி2கவலைப்படாமல் எண்ணெய் நிறுவனங்களின் வளத்தைப் பற்றியே மத்திய அரசு கவலைக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 25 விழுக்காடு அளவுக்கான கச்சா எண்ணெய் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு, சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றின் அடிப்படையிலும், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவின் அடிப்படையிலும்; விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த விலை உயர்வு பிரச்சனையே எழாது. அவ்வாறு செய்யாமல், பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான விலை மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கான விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ‘தொழில் சம நிலை விலை’ என்ற அடிப்படையில் விலை நிர்ணயிப்பது முற்றிலும் தவறானது. இது போன்ற விலை நிர்ணயக் கொள்கை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதுஎன்பது நியாயமற்ற செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தச் சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடிய இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவதை இனி மேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வழக்கம் போல “செவிடன் காதில் ஊதும் சங்கு போல்” என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு செயல்படுமேயானால், மக்களும் அதற்கேற்ப மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, செ துறை, சென்னை-9
No comments :
Post a Comment