Tuesday, November 3, 2015

Statement of CM on Calamity Relief Fund Assistance

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 4.11.2015.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முடிய பருவமழை தொடர்ந்து நீடிக்கும். கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக் கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுளேன். பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன்.

அதன்படி,
மழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 4 லட்சம் ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு 95,100 ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 5,000 ரூபாய்;
பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய்;
மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய்;
பசு மற்றும் எருமை மாடு உயிரிழப்புக்கு 30,000 ரூபாய்;
ஆடு, பன்றி உயிரிழப்புக்கு 3,000 ரூபாய்;
கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்;
என நிவாரண உதவித் தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.

மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுளேன்.

முழுவதும் பாதிக்கப்படும் கட்டு மரம் ஒன்றுக்கு 32,000/- ரூபாய் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் FRP வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 75,000 ரூபாய் வரையிலும்; பகுதி சேதமடையும் FRP வல்லம் ஆகியவற்றுக்கு 20,000 ரூபாய் என்ற வீதத்திலும்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்திலும்; பகுதி சேதமடையும் எந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் 10,000 ரூபாய்; படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

No comments :

Post a Comment