Sunday, July 11, 2021

TN Minister for Rural Industries inspected the Craft Tourism Village

 மாமல்லபுரத்தில்‌ ரூ.1.80 கோடி மதிப்பில்‌ நிறைவேற்றப்படும்‌ கைவினை சுற்றுலாக்‌ கிராமத்தினை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு. தா.மோ.அன்பரசன்‌ ஆய்வு.

 Honble Minister for Rural Industries inspected the Craft Tourism Village planned at Mamallapuram by the Tamil Nadu Handicrafts Development Corporation (TNHDC) 

பூம்புகார்‌ என்று அழைக்கப்படும்‌ தமிழ்நாடு கைத்திறத்‌ தொழில்கள்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌, தமிழகக்‌ கைவினைஞர்களின்‌ திறமை மற்றும்‌ உழைப்பினால்‌ தயாரிக்கப்படும்‌ பித்தளை, பஞ்சலோகம்‌, மரம்‌ மற்றும்‌ கற்களால்‌ ஆன கைவினைப்பொருட்களின்‌ விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காகச்‌ செயல்பட்டு வருகிறது.


இக்கழகத்தின்‌ மூலம்‌ ஒன்றிய மற்றும்‌ மாநில அரசின்‌ நிதியுதவியினைக்‌ கொண்டு ரூ. 5 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நகர்ப்புறக்‌ கண்காட்சித்திலை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. இத்திடலில்‌ கைவினைக்‌ கலைஞர்களின்‌ விற்பனையை ஊக்கப்படுத்த 36 அரங்குகளும்‌, பொதுமக்களுக்காக உணவுக்கூடங்கள்‌, ஓய்வு அறை, காட்சி அரங்கம்‌, குழந்தைகள்‌ பூங்கா, கைவினைஞர்கள்‌ தங்குமிடம்‌ மற்றும்‌ வாகன நிறுத்துமிடம்‌ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்திற்கு வருகை தரும்‌ சுற்றுலாப்‌ பயணிகளையும்‌, கைவினைஞர்களையும்‌ இணைக்கும்‌ வகையில்‌ ரூ.5.61 கோடி செலவில்‌ “கைவினை சுற்றுலாக்‌ கிராமம்‌” எனும்‌ திட்டம்‌ வகுக்கப்பட்டது. இதில்‌ முதல்‌ கட்டமாக ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, காரணைக்‌ கிராமத்தில்‌ வசிக்கும்‌ கைவினைஞர்களின்‌ குடியிருப்புகளை அழகுபடுத்துதல்‌, ஐந்துரத வீதியில்‌ அமைந்துள்ள கைவினைஞர்களின்‌ உற்பத்தி நிலையங்களைப்‌ புதுப்பித்தல்‌, மாமல்லபுர நுழைவு வாயிலில்‌ கலைநயத்துடன்‌ அமைக்கப்பட்டுவரும்‌ ஸ்தூபி பணிகள்‌ ஆகியவற்றை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. ஆய்வுக்குப்பின்‌ அரசு அலுவலர்களுடன்‌ ஆலோசனை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌, மேற்கொள்ளப்படும்‌ பணிகள்‌ உயர்தரத்துடனும்‌, கலைநயத்துடனும்‌, வெளிநாட்டுச்‌ சுற்றுலாப்‌ பயணிகளைக்‌ கவரும்‌ வகையிலும்‌, மாமல்லபுரச்‌ சிறப்பினை உலகுக்கு எடுத்துரைக்கும்‌ வகையிலும்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

இவ்வாய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.ஜி.செல்வம்‌, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ மேலாண்‌ இயக்குநர்‌ திருமதி. ஷோபனா, இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.பாலாஜி மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.


No comments :

Post a Comment