Sanction of funds for Tribal Cultural Centre, Nilgiris.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டம், இந்தியாவிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நிலவும் இயற்கை எழிலை ரசிப்பதற்காக ஆண்டுதோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இம்மாவட்டத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் கொண்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடியின மக்களின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் இம்மாவட்டம் முழுவதும் பிரதிபலிக்கின்றது.
இம்மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள இயற்கை சூழ்நிலையை மட்டும் ரசிக்காமல், இங்குள்ள மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.
எனவே பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், அவர்களது பண்பாட்டினை பாதுகாத்திடும் வகையிலும், அவர்களது கலாச்சாரத்தின் மேன்மையை மக்களிடையே எடுத்துச் செல்வதற்காகவும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் ஒன்றினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையம் பழங்குடியின மக்களின் நலனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து பழங்குடியின மக்களுடைய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திடும் அமைப்பாகவும் செயல்படும்.
இந்த மையத்தின் மூலம் மலைவாழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரே கூரையின் கீழ் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென ஒரு நவீன கலையரங்கம், பொருட்காட்சிக் கூடம், அருங்காட்சியகம் மற்றும் நிலையான விற்பனை அரங்குகளுடன் கூடிய பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் அமைக்கப்படும்.
இந்த பண்பாட்டு ஆதார மையத்தை ஒரே சமயத்தில் 984 பேர் அமரக்கூடிய தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் 51,881 சதுர அடி பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைப்பதற்கும், இம்மையம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில், தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையத்தினை கட்டுவதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அரசின் இந்த நடவடிக்கை நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தினை உலகறிய செய்ய வழிவகுக்கும்.
வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள்தொடர்புத்துறை, சென்னை-9
No comments :
Post a Comment