மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி
காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் எனது இனிய “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நாளில், குழந்தைகளைக் கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து, கால் தடங்களை வீட்டு வாசலிலிருந்து வரிசையாக பதிய வைத்தும், பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போலத் தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய், பழ வகைகளைப் படைத்து இறைவனை வழிபட்டு மகிழ்ச்சியடைவர்.
செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விட்டு, சர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, இறைவன் திருவடியை சரண் அடைபவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவர் என்கிறது கண்ணன் அருளிய கீதை.
கீதையை அருளிய கண்ணன் அவதரித்த இந்தக் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும், அறச் செயல்களை மென்மேலும் வளர்த்து, தீமைகளை அகற்றி, நன்மைகள் பெருகச் செய்து, உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
No comments :
Post a Comment