Friday, August 14, 2015

Independence Day Greeting message of the Honble Chief Minister -2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துச் செய்தி

ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை மீட்டு, நாட்டு மக்களும் அவர்தம் வருங்கால சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசித்திட, தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திர போராட்ட தியாகச் செம்மல்களின் நாட்டுப் பற்றையும் தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்த சுதந்திரத் திருநாளாகும்.


இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிடும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்; அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும்; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 2,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி வருகிறது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில் பல்வேறு தியாகிகளின் மணிமண்டபங்களை எனது தலைமையிலான அரசு எழுப்பி சிறப்பித்து வருவதுடன், தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புதுப்பித்து, புனரமைத்து, பராமரித்து வருகிறது. அந்த வகையில், 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தையும், 2015-ஆம் ஆண்டு விருதுநகரில் அமைக்கப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாற்றில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தேன்.

“இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கிருக்கும் யாவரும்
இந்தியாவின் மக்களென்ற சொந்தம் காணச் செய்குவோம்”

                       -- என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி,மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

No comments :

Post a Comment