Honble Chief Minister has sanctioned Relief Assistance to fishermen families during Fishing Ban Period.
செய்தி வெளியீடு எண்: 139
நாள்:23.05.2021
செய்தி வெளியீடு
தமிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி நடப்பாண்டிற்கு (2021ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000- வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி (குதி) ஆகியவற்றைச் சேர்ந்த 1,46,598 பயனாளிகளும், மேற்கு கடற்கரைப் பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 172,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
No comments :
Post a Comment