செய்தி வெளியீடு
அதிகப்படியான நோய் தொற்று பரவல் மக்களிடையே இரண்டாம் அலையில் பேரழிவிற்குள்ளாக்கி வருவதால் பலர் தங்கள் உயிரை இழக்கின்றனர். கோவிட் - 19 இன் தாக்கம் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கிறது என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழக அரசு, குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதால், ஏற்கனவே மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகள் மூலம் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து, பொது மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட் ஆட்சியர் உட்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான பணிக்குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-
1. கோவிட்-19 காரணமாக இறந்த அனைத்து வயதுவந்தோரின் விவரங்களையும் சரிபார்த்து, பெற்றோர் இழந்த அல்லது கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை குழந்தைகள் நலக் குழுவின் முன் முன்னிலைப்படுத்துதல், குழந்தை நலக் குழுவானது இக்குழந்தைகளை தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு (Foster Care), நிதி ஆதாரத் திட்டம் (Sponsorship) போன்ற திட்டங்கள் மூலம் மறுவாழ்வு வழங்குதல் அல்லது குழந்தைகள் இல்லங்களில் சேர்த்தல் ஆகிய மறுவாழ்வு குறித்து முடிவு செய்யும். இவற்றில் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு),சட்டம் 2015-ன்படி, குழந்தைகளை இல்லங்களில் சேர்த்தல் என்பது கடைசி புகலிடமாக இருக்கும்.
2. பெற்றோர்கள் சிகிச்சையில் இருக்கும்போது குழந்தைகளை கவனித்துக்கொள்ள உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் தற்காலிகமாக குழந்தைகள் இல்லங்களில் தங்கவைத்தல்.
3. கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல்.
4. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிகிச்சை மையங்களுக்கு சரியான நேரத்தில் பரிந்துரைத்தல் மற்றும் கோவிட்-க்கு பிந்தைய சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதலை உறுதி செய்தல்.
5. ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவுசெய்யப்பட்ட ஒரு குழந்தைகள் இல்லத்தினை கண்டறிந்து அதனை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமாக கோவிட்-19 பராமரிப்பு மையமாக மாற்றுதல்.
மாவட்ட அளவிலான . பணிக்குழுவானது, கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் வாரத்திற்கு ஒருமுறை மற்றும் தேவையின் அடிப்படையில் கூடும்.
No comments :
Post a Comment