Announcement of the Honble Chief Minister on compensation and incentive for the Frontline health workers involved in the treatment of COVID-19
செய்தி வெளியீடு எண்: 041
நாள்:12.05.2021
"கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு - இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றும் அரும்பணியில், கடந்த ஓராண்டாக மருத்துவர்களும், செவிலியர்களும் இதரப் பணியாளர்களும் அயராது அரும்பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் தமது உயிரைத் துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர். இது ஈடுசெய்யப்பட முடியாத பெரும் தியாகம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும்வகையில், கொரோனா சிகிச்சைப் பணியாற்றியபோது அத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் தொகையை இழப்பீடாக வழங்கிட முடிவு செய்துள்ளது.
மேலும், அல்லும் பகலும் நமது அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன் -மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
No comments :
Post a Comment