மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள்
நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!
கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள்; ஊரடங்குக் கட்டுப்பாடுகள்; நம்முடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றின் காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோயாக இருப்பதால் அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கருதப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது.
கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் கூடுதலாகி வருகிறது. மக்கள் தொகை அதிகமாகவும், நெரிசலாக வாழும் சூழலும் உள்ள நாட்டில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது. இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments :
Post a Comment