Thursday, August 8, 2013

Free Training For Differently Abled.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருமாத இலவச மல்டிமீடியா பயிற்சி அறிவிப்பு 

      மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் 100 நபர்களுக்கு ஒரு மாத பல்லூடக பயிற்சி (Multimedia Trining) மற்றும் 100 நபர்களுக்கு இலக்க புகைப்பட பயிற்சி (Digital Photography Training) தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், சென்னையில் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.21. 00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இப்பயிற்சிக்கான தகுதிகளாக, மாற்றுத் திறனாளிகள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 16 முதல் 40 வயது வரம்புக்ளுள் இருக்க வேண்டும். விடுதி வசதி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு விடுதி வசதியும் மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ரூ.1,000/- வழங்கப்படவுள்ளது.



      இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள், விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்று நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன், பெயர் மற்றும் முகவரி, வயது, கல்வித் தகுதி, மாற்றுத் திறன் தன்மை மற்றும் சதவீதம், விடுதி வசதி தேவையா என்ற விவரம், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கு நேரிலோ/ தபால் மூலமாக 16.8.2013க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Ramzan Greeting Message From the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “ரம்ஜான்” திருநாள் வாழ்த்துச் செய்தி 

     ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

     புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.



     அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தருமம் செய்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட உறுதியேற்போம்.

     இந்தப் புனித ரம்ஜான் பெருநாளில் எல்லா துறைகளிலும் தமிழகம் சிறப்பு எய்திட நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம் என்று கூறி எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர் .

வெளியீடு: 
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9 

Saturday, August 3, 2013

Statement of CM On Indira Ninaivu Kudyiruppu Thittam.

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு, கிராமப்புற மக்களின் நலனுக்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான வீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர, கிராமப்புறப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டும் திட்டத்தினை மைய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

              இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகை 45000 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசின் பங்கு 33750 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்கு 11250 ரூபாய் ஆகும். மேலும் கான்கீரிட் கூரைகளுக்கு என தனியாக மாநில அரசால் 30000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கீரிட் கூரை அமைப்பதற்காக மாநில நிதியிலிருந்து வழங்கப்படும் தொகையினை 30000 ரூபாயிலிருந்து 55000 ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணையிட்டார்கள். இதன் மூலம் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகுத் தொகை 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

          இந்த ஆண்டு (2013-2014) முதல் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான அலகுத் தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதில் மத்திய அரசின் பங்குத்தொகை 52500 ரூபாய் ஆகும். மாநில அரசின் பங்குத் தொகை 67500 ரூபாய் ஆகும்.

          இந்த ஆண்டு (2013-2014) இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 88436 வீடுகள் தமிழ்நாட்டில் கட்டப்பட இலக்கு நிர்ணயித்துள்ளது. 88436 வீடுகளுக்கான மாநில அரசின் பங்குத் தொகையான 603 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

வெளியீடு : இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,சென்னை-9

Wednesday, July 31, 2013

CM Sanctions Additional Funds for Green House Scheme.

          வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. 

           மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின்படி சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 60,000 வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கினை நிர்ணயித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆணைக்கிணங்க 2011-2012 ஆம் ஆண்டு 1080 கோடி ரூபாய் செலவில் 60,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2012-2013 ஆம் ஆண்டிற்கான இலக்கான 60,000 வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்பட உள்ளன. 



            இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை 2013-2014 ஆம் ஆண்டு முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகையில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டட பணிகளுக்கும், 30 ஆயிரம் ரூபாய் சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதற்கும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலக்கான 60,000 பசுமை வீடுகள் கட்டுவதற்காக 1260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்ஆணையிட்டுள்ளார்கள்.  அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். 

******
வெளியீடு: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 
நாள் 31 .7.2013

CM Conducted Inspection at Mudumalai Wildlife Sanctuary.