Wednesday, October 16, 2013

Honble Chief Minister Announced Special Buses for Deepavali.

      தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 29.10.2013 அன்று 700 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 1000 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1200 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1400 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 4300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

     அதேபோல், சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29.10.2013 அன்று 634 சிறப்புப் பேருந்துகள், 30.10.2013 அன்று 950 சிறப்புப் பேருந்துகள், 31.10.2013 அன்று 1256 சிறப்புப் பேருந்துகள், 1.11.2013 அன்று 1210 சிறப்புப் பேருந்துகள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை 4050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்து 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 8350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பேருந்துகள் நவம்பர் 2.11.2013 முதல் 5.11.2013 வரை இயக்கப்படும்.



     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க, 300 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், (Online Ticket Reservation System) பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்.24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க எடுக்கப்பட்டுள்ள மேற்காணும் நடவடிக்கைகள், தமிழக மக்கள் தீபாவளித் திருநாளை முன்னிட்டு எவ்வித சிரமுமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வழிவகுக்கும்.

Tuesday, October 15, 2013

Statement of the Honble Chief Minister on Awards to Police Officers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை

    இந்து முன்னணிப் பிரமுகர் வெள்ளையப்பன் வேலூரில் கொலை செய்யப்பட்ட வழக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை திருமங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திரு. எல்.கே. அத்வானி அவர்கள் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் மதுரையைச் சேர்ந்த ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து துப்பு துலக்கியதன் பேரில், சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான ‘‘‘‘போலீஸ்’ ’ ’ ’ பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக காவல் துறையினர் 5.10.2013 அன்று கைது செய்தனர்.

   இந்தப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினரின் வீரதீரச் செயலையும், கடமை உணர்வையும் பாராட்டி, தமிழகக் காவல் துறையின் பெருமையை நிலைநிறுத்தியதற்காக அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை மற்றும் ஒருபடி பதவி உயர்வு அளிக்க நான் உத்தரவிட்டேன்.



    இதன்படி, இந்த வீரதீரச் செயலில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் திரு. எஸ். லட்சுமணன் அவர்களை 9.10.2013 அன்று நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவருடைய வீரதீரச் செயலைப் பாராட்டி 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவருடைய மனைவியிடம் வழங்கினேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் திரு. எஸ். லட்சுமணன் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிட தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு நான் அறிவுறுத்தினேன். அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என்பதையும் அறிவித்தேன்.

     இதன் தொடர்ச்சியாக, தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க ஏதுவாக விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல் துறையினரை 9.10.2013 அன்று தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவர்களை கௌரவிக்கும் வகையில், 21 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, உயிரை துச்சமென கருதி வீரதீரத்துடன் செயலாற்றியமைக்காக எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நான் தெரிவித்தேன். இது போன்ற குற்றவாளிகளைப் பிடிப்பதில் கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை இன்றியமையாதவை. இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலும், இது தொடர்பான சில வழக்குகளிலும் சிறப்பாகப் பணியாற்றி நுண்ணறிவு தகவல்கள் அளித்து, தங்கள் கடமையை செவ்வனே செய்துள்ள வேறு பலருக்கும் ரொக்கப் பரிசினை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

     1. இதன்படி, 4.10.2013 அன்று போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு முயற்சி செய்த ஆய்வாளர் திரு. லட்சுமணன் மற்றும் திரு. ரவீந்திரன் ஆகியோரை எதிரி தாக்கி தப்ப முயற்சித்த போது அங்கு உடனடியாக வந்து அந்தக் குற்றவாளியை மடக்கி கைது செய்வதற்கு பெரும் துணையாக இருந்த பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. வீரகுமார் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

     2. மேலும், புத்தூரில் வீட்டில் பதுங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய குற்றவாளிகளை வெளிக் கொணருவதற்கும், வீட்டிலிருந்த பெண் மற்றும் மூன்று குழந்தைகளை உயிருடன் வெளியே கொண்டு வருவதற்கும் குற்றப் பிரிவு கண்காணிப்பாளருக்கு உதவியாக இருந்த மதுரை சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் திரு. எம். விஜயபெருமாள் மற்றும் மதுரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைமைக் காவலர் திரு. கே. மாரியப்பன் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

     3. போலீஸ் பக்ருதீனை பிடிப்பதற்கு ஆய்வாளருக்கு தகவல் அனுப்பி உதவி செய்த பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் செல்வி ராதிகா அவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், மேற்படி வழக்குகளில் தக்க தகவலை தகுந்த சமயத்தில் அளித்த மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. எஸ். ராமமூர்த்தி மற்றும் திருநெல்வேலி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் திரு. பி. பண்டரிநாதன் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

    4. இது தவிர, சென்னையில் பெரியமேடு காவல் ஆய்வாளருக்கு உதவி செய்த ஐந்து காவல் அலுவலர்கள், புத்தூரில் வெடிப் பொருட்களை கைப்பற்றி செயலிழக்கச் செய்த ஆறு பேர் மற்றும் பல்வேறு வழக்குகளில் எதிரிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவி செய்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள்; மேலும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (Special Division), சிறப்பு புலனாய்வுப் பிரிவு (Special Investigation Division), சிறப்பு நுண்ணறிவுக் குழு ((Special Intelligence Cell), சிறப்புப் புலனாய்வுக் குழு (Special Investigation Team) ஆகிய பிரிவுகளில் பணியாற்றி பயனுள்ள தகவல்கள் சேகரித்தும், விசாரணைகளில் உதவி செய்தும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்கள் மொத்தம் 245 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் காவல் துறையினர் தங்கள் கடமையை மேலும் சிறப்புற செய்ய வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 


Bakrid Greetings of the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி 

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள்அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.



       தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Thursday, October 10, 2013

DA Announcement for Government Servants and Teachers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 10.10.2013 

    “மக்களின் குரலே மகேசனின் குரல்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் “மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி” என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.



    அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்.


ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 

Wednesday, October 9, 2013

Funds for Construction of Modern Facility Godowns for Agriculture Department.

     உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சேமித்து வைக்க அதிக அளவிலான நவீன கிடங்குகளை தமிழகம் முழுவதும் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பதப்படுத்துவதன் மூலமே, அவைகள் கெடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றம், வருமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

     எனவே உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 
      இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கும் 49 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       இந்த பயிற்சி நிலையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்தல், பாதுகாப்பாக கையாளுதல், சிப்பமிடுதல் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உணவுப் பதப்படுத்தலில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் வேலைப் பளுவை குறைத்தல், விவசாய கழிவுகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களை தயாரித்தல், கால்நடை தீவனம், எரிபொருள் போன்றவைகளை உற்பத்தி செய்வது போன்ற நடைமுறைகளை பண்ணை அல்லது கிராம அளவில் செயல்படுத்த பயிற்சி அளித்தல், மருத்துவ குணமுள்ள உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குதல், மேம்படுத்தப்பட்ட சிப்பமிடுதல் முறைகளினால் பொருட்களின் சேமிப்புக் காலத்தை நீட்டித்தல், எதிர்கால பயன்பாட்டிற்கும் உலகச் சந்தைப்படுத்தலுக்கு பயன்படும் வகையிலும் உணவு பதனிடுதலையும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல், விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளியிலிருந்து இடையில் நின்றவர்கள் ஆகியோருக்கு பயிற்சி மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய சுயதொழில் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.