Monday, November 25, 2013

CM Handed Over Prizes in the FIDE World Chess Championship.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (25.11.2013) சென்னையில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டி – 2013-ல் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சார்ந்த திரு மேக்னஸ் கார்ல்சன் அவர்களுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்கள். மேலும், இரண்டாமிடம் பெற்ற திரு விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வெள்ளிப் பதாகையும், 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்கள்.



Wednesday, November 20, 2013

Inauguration of Amma Unavagam at Government Hospital.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (20.11.2013) தலைமைச் செயலகத்தில், சென்னை, அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில் சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார்கள்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை இன்று வழங்கினார்கள்.



     பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ‘ஹ’ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத்  துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்கள்.



     சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர்கார்டனிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்கள்


Wednesday, November 13, 2013

Applications Invited for Kabir Puraskar Award.

       சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருது, ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒருநபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுள்ளவர்கள். (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில்), இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

       2014 ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) அவை தொடர்பான ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக, அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 அவர்களுக்கு 15.12.2013க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர்அவர்களால், 26.01.2014 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

 யத்தீந்திர நாத் ஸ்வேன்
அரசு முதன்மைச் செயலாளர்.