Sunday, October 11, 2015

Job Mela at R.K.Nagar



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 17.10.2015 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை ஆர்.கே.நகர் சென்னை துறைமுக மைதானம்(ஆஞகூ), தண்டையார்பேட்டை, சென்னை-81-ல் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கு கொண்டு 20,000 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிப்போர் கோரும் சிறப்புத் திறன்களை அறிந்து அதற்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்க்க விரும்புபவர்கள் பயனுறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுயவேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விரும்புவோர் தங்களது பெயர்களை www.tnvelaivaaippu.gov.in/jobMela.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Saturday, October 10, 2015

CM on the release of water for irrigation from Thirumurthi Dam

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு உள்ளிட்ட கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு பழைய ஆயக்கட்டு தளி வாய்க்கால் பாசனத்திற்காகவும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்காம் மண்டல பாசனத்திற்காகவும் 12.10.2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 96,854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்



Condolence message of CM on the sad demise of the renowned actress Tmt. Manorama

மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் இரங்கல் செய்தி -11.10.2015

பழம்பெரும் திரைப்பட நடிகை திருமதி மனோரமா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்படும் திருமதி மனோரமா அவர்கள் இந்தியத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்தவர். மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை கதாநாயகர்கள் மற்றும் இன்றைய தலைமுறை கதாநாயகர்களுடன் 1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் திருமதி மனோரமா அவர்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா அவர்கள் 1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயக்கிய “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் நடித்த முக்கிய வேடத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக 1963 ஆம் ஆண்டு வெளிவந்த “கொஞ்சும் குமரி” என்ற படத்தில் நடித்துள்ளார். பொம்மலாட்டம், சூரியகாந்தி, பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம், அன்பேவா, தில்லானா மேகானாம்பாள், சின்னத்தம்பி, உன்னால் முடியும் தம்பி, சம்சாரம் அது மின்சாரம், நடிகன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.



பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் திருமதி மனோரமா அவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் என்னுடன் பல படங்களில் நடித்துள்ளார் திருமதி மனோரமா அவர்கள். அவர் என்னுடன் நடித்து வெளிவந்த கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அவருடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. என்னுடன் அவர் நடித்து அன்று வெளிவந்த பொம்மலாட்டம் திரைப்படத்தில் அவரது சொந்தக் குரலில் பாடிய “வா வாத்தியாரே வூட்டான்ட” என்ற பாடலும், சூரிய காந்தி படத்தில் அவர் பாடிய “தெரியாதோ நோக்கு” என்ற பாடலும் அன்று பட்டித் தொட்டிகள் அனைத்திலும் பிரபலமானது ஆகும். இத்துடன் 300க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இவர் திரைப்படத்துறையில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது, தேசிய விருது மற்றும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

திருமதி மனோரமா அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

திருமதி மனோரமா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்