Thursday, November 5, 2015

Admission Notification to ITI Courses - Fitter, Electrician and MMV

Adi Dravidar and Tribal Welfare Department on the admission notification to ITI Courses - Fitter, Electrician and MMV

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் தொழில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விழையும் மாணாக்கர்களின் ஆர்வத்தை ஈடு செய்யும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 2014-2015ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின் படி திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெறுகின்றது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வெல்டர் மற்றும் வயர்மேன் பயிற்சி வகுப்புகளும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பிட்டர், எலக்டீரிசியன் மற்றும் மோட்டார் வாகனம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ/மாணவியர்களுக்கு மடிக்கணிணி, மிதிவண்டி, சீருடைகள், வரைபடக்கருவி மற்றும் பேருந்து கட்டணங்கள் இலவசமாக வழங்குவதுடன் பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.500/- வழங்கப்படும். மாணவர்களுக்கு வயது வரம்பு 14வயது முதல் 40 வயதிற்குள்ளாகவும், மாணவியர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் படிவங்கள் பெற்று அனுப்புவதற்கு கடைசி நாள்16.11.2015 என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பப் படிவம் பெறும் முகவரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் மாவட்டம்.

 இயக்குநர்
 ஆதிதிராவிடர் நலத்துறை


Results of Army Recruitment CEE 18th October 2015 - Chennai Zone

TN Ministers chaired a meeting on the preventive measures to be taken for the rainy season disease

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons, Honble Minister for Animal Husbandry and Honble Minister for Health chaired a meeting on the preventive measures to be taken for the rainy season disease


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள்துறை அமைச்சர், மாண்புமிகு கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர், மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை!
தொற்றுநோய் தடுப்பு பணியில் உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரதுறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்! மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் அறிவுரை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, தமிழகத்தில் எடுக்கப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் உள்ளது !
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் உள்ளது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் திரு.டி.கே.எம்.சின்னையா மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் தொற்று நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பன்முக நடவடிக்கைகளை (Multi Dimensional Activities) எடுத்து வருகிறது. மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இதுவரை 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மண்டல / மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் (ம) சிறைச்சாiகைள் துறை அமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரால் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (05.11.2015) காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், கொசுவினால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், அதை முழுமையாக ஒழிப்பதற்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள்.

i. தமிழகத்தில் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்து, அதன் மூலம் பரவும் காய்ச்சலை தடுக்கும் வகையில், வீடுகளில் நீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது,  குடிநீரைக் காய்ச்சி பருகுதல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாவண்ணம் மூடி வைத்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ii. அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவும், பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

iii. அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. அதே நேரத்தில் காய்ச்சல் கண்டவுடன் பதட்டமோ பீதியோ அடைய தேவையில்லை. காய்ச்சல் கண்டவுடன் பொதுமக்கள் மருத்துவர்களையோ, மருத்துவமனையையோ அணுகாமல் தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வதையும், அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரை மருந்துக்கள் போதிய அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

iv. அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்காலிக பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது /இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

v. ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு (சுயயீனை சுநளயீடிளேந கூநயஅ) இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் இக்குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

vi. “எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, மருந்துகள், இரத்தக் கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

vii. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவிக்கப்படுகிறது.

viii. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய 24 மணி நேர கட்டுபாட்டு அறை ( 24 hour Control Room) பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படுகிறது. அதன் தொலைபேசி எண்கள் – 044-24350496, 044- 24334811, 104 கைபேசி எண் 94443 40496. மேலும் 104 - தொலைபேசி வசதியையும் பொதுமக்கள் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

ix. மேலும், டெங்கு மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களின் நிலைமை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு வாரம் தவறாமல் ஆய்வு செய்து வருகிறது.

மேலும் மாண்புமிகுஅமைச்சர் பெருமக்கள் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கீழ்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள்.

1) சுகாதாரமான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் குறைந்தபட்ச குளோரின் அளவு 0.2 பிபிஎம் ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலை கிணறுகள் போன்ற நீராதாரங்களில் குளோரின் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

2) வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான டயர், கொட்டாங்கச்சி மற்றும் திறந்த நிலை தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால்களை தினமும் சுத்தப்படுத்தி வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொசு ஒழிப்பு மருந்தை சரியான கால இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

3) பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து சுகாதார பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் காலை 6 மணிக்கு அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். கொசு உற்பத்தியாகும் ஆதாரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

4) தொற்று நோய்களைப் பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் உள்ளேயும், வெளியேயும் புகை அடித்தல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

5) மாநகராட்சி மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள காலிமனைகளில் சில இடங்களில் பொது மக்களால் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கும் குப்பை கூளங்களை, அவ்விடம் தனியார் இடம் என்றும் பாராமல் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொசுமுட்டை மற்றும் புழுக்களை ஒழித்திட தேவையான அளவு மருந்தினை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

6) புகை அடிக்கும் இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படின் உடனடியாக புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) மகளிர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தில் உள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோரை தொற்று நோய் ஒழிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக கைபிரதிகள் வழங்குதல், ஊர்வலம், தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆகிய முறைகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8) தொற்று நோய் பாதிப்புகள் அறியப்பட்டுள்ள இடங்களில் மேற்படி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற ஏதுவாக சிறப்பு குழுக்கள் அமைத்து சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மேற்கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி நகராட்சி நிர்வாகம் (ம) ஊரக வளர்ச்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக காஞ்சிபுரத்தில் அரசு பொது மருத்துவமனை,காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அம்மா உணவகம், பி.எஸ்.கே.நகர் ஆகியவற்றை ஆகியவற்றை மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு செய்து நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியும் ஒட்டுமொத்த துப்புரவு பணியும் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் திரு.பா.கணேசன்,மொளச்சூர் திரு.இரா.பெருமாள், திருமதி.கணிதா சம்பத்திரு.பி.தன்சிங், திரு.கே.மனோகரன், திரு.வி.என்.பி.வெங்கடராமண், திரு.கே.பி.கந்தன், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை செயலர் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன்,இஆப., இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் திரு. மோகன் பியாரே, இஆப., ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் திரு.பாஸ்கரன் இ.ஆ.ப , காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர். கெஜலட்சுமி இஆப., மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் டாக்டர் அ.சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி, காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் திருமதி.மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி நிர்வாகம் (ம) ஊரக வளர்ச்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

The Training in Traditional Arts for the Youth

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

"பாரம்பரிய கிராமியக் கலைகளில் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தல் "

கலை பண்பாட்டுத்துறையின் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், முத்தமிழான இயல், இசை, நாடகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு கலைப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தமிழக கலை வடிவங்கள் அழிந்து வரும் நிலையில், அக்கலைகளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சென்றால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதால், ஆர்வமுள்ள இளங்கலைஞர்களைத் தெரிவு செய்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளில் இளைய சமுதாயத்தினருக்கு பயிற்சி அளித்திட அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையினை செயல்படுத்திடும் நோக்கில், நாட்டுப்புறக் கலைகளான பொய்க்கால் குதிரை, கரகம், காவடி ஆகியவற்றில் ஒரு மாத பயிற்சி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் 15.11.2015-க்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு தன்விவரக்குறிப்புடன் (Bio-Data) விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் 30 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் (முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்). இப்பயிற்சியானது 23.11.2015 அன்று தொடங்கி ஒரு மாத பயிற்சியாக மாலை நேரத்தில் ( மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை) நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-24937471 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tuesday, November 3, 2015

Statement of CM on Special Buses for Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 3.11.2015

தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி,

1. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

2. இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

3. மொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

4. இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.

5. மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

6. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் றறற.வளேவஉ.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

7. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்