Honble Chief Minister handed over appointment order on compassionate ground to the legal heirs of the victims in the incident of Sterlite Factory, Thoothukudi District.
செய்தி வெளியீடு எண்:122
நாள்:21.05.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஈப்பு ஒட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்திருந்தனர்.
தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஒட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை இன்று (21.5.202] மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், மாண்புமிகு மீனவளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்ட கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் 14.05.2021 அன்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9