ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத் தொகை - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
Honble Chief Minister has announced cash incentive for Sportsmen from Tamil Nadu who are participating in the Olympics, Japan.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்குகொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில், ஜப்பான் டோக்கியோவில் 23.7.2021 முதல் 8.8.2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தடகள விளையாட்டில் 4 % 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. எஸ். ஆரோக்கிய ராஜீவ் மற்றும் திரு.நாகநாதன் பாண்டி மற்றும் 4 % 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் கலப்புப் பிரிவில் செல்வி.சுபா வெங்கடேசன், செல்வி. தனலஷ்மி சேகர் மற்றும் செல்வி. ரேவதி வீரமணி என மொத்தம் 5 தடகள வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூபாய் 25 இலட்சம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இவ்வீரர்களில், திரு. எஸ். ஆரோக்கிய ராஜீவ் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், செல்வி. சுபா வெங்கடேசன் அவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகிய உயரிய திட்டங்களின்கீழ்ப் பயிற்சி பெற்றவர்களாவார்கள்.
ஏற்கனவே, ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர்களுக்குத் தலா ரூபாய் 5 இலட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 30 இலட்சம் அரசின் சிறப்பு ஊக்கத்தொகையினைக் கடந்த 26-6-2021 அன்றும், மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி.சி.ஏ. பவானி தேவி அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகையினை 20- 6- 2021 அன்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.