Saturday, November 30, 2013

Honble Chief Minister on Diesel Price Hike.

      சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தையும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும் சுட்டிக் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாதாமாதம் உயர்த்திக் கொண்டே வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது எவ்வித காரணத்தையும் சுட்டிக் காட்டாமல் டீசல் விலையை இன்று முதல் லிட்டருக்கு 50 பைசா என உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  டீசல் விலையை மாதாமாதம் ஏற்றிக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதிலிருந்து இதுவரை 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



       விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இதற்கு நேர்மாறான போக்கை மத்திய அரசு கடைபிடிப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும். இந்த விலை உயர்வு முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுகின்ற செயலாகும்.

      இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயரக் கூடும். இது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளின் கட்டணமும், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோரை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணமும் அதிகரிக்கும். இதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

      மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்; சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் ஓரளவு நிலையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும்; இந்த டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்

Message from Honble Chief Minister on Aids Day.

     ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து "புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, புறக்கணித்தல் இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்" என்பதாகும்.

     தமிழகத்தில் எச்.ஐ.வி. நோயை கண்டறிய 1471 நம்பிக்கை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 52 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 116 இணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் 16 சட்ட உதவி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை யாவும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லா நிலையை எட்ட தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.



     எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை செயல்படுத்தும் விதமாக, எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ஆண்டுதோறும் நிதியுதவியும், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமும் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியமும், எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.

     புதிய தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதால் தமிழகத்திலுள்ள 10,784 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 13 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2387 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் இருப்பதற்காக புதிய மருந்துகள் சென்ற ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயை தடுக்க அனைவரும் தன்னார்வ ரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Tamil Nadu Goverment Cable TV Corporation Ltd.


Monday, November 25, 2013

CM Handed Over Prizes in the FIDE World Chess Championship.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (25.11.2013) சென்னையில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக சதுரங்க வாகையர் போட்டி – 2013-ல் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சார்ந்த திரு மேக்னஸ் கார்ல்சன் அவர்களுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்கள். மேலும், இரண்டாமிடம் பெற்ற திரு விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு வெள்ளிப் பதாகையும், 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்கள்.



Wednesday, November 20, 2013

Inauguration of Amma Unavagam at Government Hospital.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (20.11.2013) தலைமைச் செயலகத்தில், சென்னை, அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில் சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார்கள்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா கொசுவலைகள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு கொசுவலைகளை இன்று வழங்கினார்கள்.



     பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ‘ஹ’ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்; சென்னை மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்திட பொதுமக்களுக்கு 5.5 லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் வழங்கும் திட்டம்; ஆகியவற்றைத்  துவக்கி வைக்கும் அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று பப்பாளி மரக்கன்றுகள் மற்றும் நொச்சிச் செடி கன்றுகளை வழங்கினார்கள்.



     சென்னையிலுள்ள படித்த ஏழை எளிய பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சியால் முதற்கட்டமாக 710 ஏழை எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையிலுள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் பெரம்பூர் பந்தர்கார்டனிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்சி மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்து, 4 நபர்களுக்கு சேர்க்கை கடிதங்களை வழங்கினார்கள்