Honble Chief Minister inaugurated the mineral water bottling unit through Video Conference
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (15.9.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி (ஏனைநடி ஊடிகேநசநnஉiபே) மூலமாக திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன் பெறும் வகையில் “அம்மா குடிநீர்” விற்பனையைத் துவக்கி வைத்தார்கள்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 21.6.2013 அன்று அறிவித்தார்கள்.அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் திரு பிராஜ் கிஷோர் பிரசாத், இ.ஆ.ப., அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு கூ. ரங்கராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9
நாள்: 15.9.2013