Showing posts with label CM Inaugurated the Distribution of Remdesivir to Private Hospitals. Show all posts
Showing posts with label CM Inaugurated the Distribution of Remdesivir to Private Hospitals. Show all posts

Wednesday, May 19, 2021

CM Inaugurated the Distribution of Remdesivir to Private Hospitals

 Honble Chief Minister inaugurated the procedure of distributing Remdesivir to Private Hospitals on receiving requests online

செய்தி வெளியீடு எண்‌:097 

நாள்‌:19.05.2021

செய்தி வெளியீடு

கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டு தனியார்‌ மருத்துவமனைகளில்‌ சிகிச்சை பெற்று வரும்‌ நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர்‌ மருந்து தமிழ்நாடு அரசால்‌ வழங்கப்படும்போது, மருந்து விற்பனை செய்யப்படக்கூடிய இடங்களில்‌ கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்கவும்‌, அவ்வாறு வழங்கப்படும்‌ மருந்து தவறான முறையில்‌ விற்பனை செய்யப்படுவதைத்‌ தடுக்கவும்‌, மருத்துவமனைகள்‌ மூலமாக அதனை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 16-5-2021 அன்று ஆணையிட்டார்கள்‌.

இதன்படி, கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும்‌ தனியார்‌ மருத்துவமனைகள்‌ இணையதளத்தில்‌ பதிவு செய்து, ஆக்சிஜன்‌ சிகிச்சை பெற்று வரும்‌ நோயாளிகளின்‌ விவரங்களை அளித்து, ரெம்டெசிவிர்‌ மருந்தைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கான வசதி https://tnmsc.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யும்‌ மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம்‌, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்‌ உள்ள விற்பனை மையங்களில்‌ ரெம்டெசிவிர்‌ மருந்துக்‌ குப்பிகள்‌ வழங்கப்படும்‌.

இந்த முறையில்‌ இதுவரை 343 தனியார்‌ மருத்துவமனைகள்‌ பதிவு செய்துள்ளன. இவற்றில்‌, 151 மருத்துவமனைகள்‌ ரெம்டெசிவிர்‌ மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின்‌ விவரங்களுடன்‌ பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, சென்னை, ஜவஹர்லால்‌ நேரு உள்விளையாட்டு அரங்கில்‌ உள்ள விற்பனை மையத்தில்‌ இன்று தொடங்கி வைத்தார்கள்‌. இந்த நிகழ்வில்‌ முதற்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர்‌ மருந்துக்‌ குப்பிகள்‌ வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை திரு. மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ திரு. பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. தயாநிதி மாறன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. ஐ. பரந்தாமன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ ஜெ. ராதாகிருஷ்ணன்‌, தமிழ்நாடு மருத்துவப்‌ பணிகள்‌ கழகத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ டாக்டர்‌ பு. உமாநாத்‌, இ.ஆ.ப., ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9