Honble Chief Minister chaired a meeting with Honble Ministers and Secretaries on the preventive measures and the action taken for the North East Monsoon
எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மின்வாரியம் ஆகியவை உள்ளிட்ட அரசுத் துறைகள் மிகுந்த விழிப்புடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய 440 மி.மீ. மழை பெறப்படும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சராசரி மழை அளவு 697 மி.மீ. ஆகும். தற்போது வரை 500 மி.மீ. மழை பெய்துள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்தில் பெருமழை காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
8.11.2015 மற்றும் 9.11.2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 266 மி.மீ. மழை பெய்துள்ளதால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளதால், 9.11.2015 அன்று மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி அவர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க நான் உத்தரவிட்டதின்பேரில், 9.11.2015 அன்று முதல் திரு ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கென அனுப்பப்பட்ட திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பணிகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் திரு பாஸ்கரன் இஆப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் இஆப., தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு விஜயராஜ்குமார், இஆப., தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சாய்குமார் இஆப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு மகரபூஷணம், இஆப., தொழில் துறை கூடுதல் செயலாளர் திரு எம்.எஸ் சண்முகம் இஆப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திரு.ஆபிரகாம், இஆப., பொது சுகாதாரத் துறை இயக்குநர் திரு குழந்தைசாமி ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25000 பேர், நகரப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4000 பேர் என மொத்தம் 29000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் மூன்று பொது சமையல் கூடங்களும், கிராமப் பகுதிகளில் எட்டு பொது சமையல் கூடங்களும் இயங்கி வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலா 2 துணை ஆட்சியர்கள் தலைமையில், 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்கு துணை ஆட்சியர்கள் மற்றும் 23 சார் நிலை அலுவலர்கள் கொண்ட குழுக்கள், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெருமழை காரணமாக 2000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
கடலூர் மாவட்டத்தில் 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களில், 7 திட்டங்களுக்கான மின் ஊட்டிகளும், 180 ஊரக மின் ஊட்டிகளில் 153ம், நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து 51 மின் ஊட்டிகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க, வெளி மாவட்டங்களிலிருந்து 2000 மின் வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்காணும் பணிகளை மின் வாரிய தலைவர் தலைமையில், தலைமைப் பொறியாளர் மற்றும் சார் நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த 683 கிராம ஊராட்சிகளில், 430 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள கிராமப் பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது.
மின் விநியோகம் தடைபட்டிருந்த போது ஜெனரேட்டர்கள் மூலம் நகரப் பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. இன்னமும் மின் விநியோகம் சீர் செய்யப்படாத கிராம ஊராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மற்றும் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 37 நகரும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்றுநோய் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் வடலூர் - கும்பகோணம் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தினை ஆய்வு செய்து நான் ஏற்கெனவே அறிவித்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்திலிருந்து சுமார் 100 FRP வல்லங்கள் கெடிலம் ஆற்று வெள்ளத்தினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்றும், இன்றும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு இடங்களில் சுமார் 40 வல்லங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு கடலோர காவல் படையுடன் இணைந்து மாநில மீன்வளத் துறை மேற்கொண்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசி போடுவதுடன் தேவையான சிகிச்சையையும் அளித்து வருகின்றன
. தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள் ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை கடலூர் மாவட்டத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ளேன்.
இதர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்