மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 1,330 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.8.2021) கொளத்தூர், குருகுலம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி, முதியோர், கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித் தொகைகளுக்கான ஆணைகள், மூன்று சக்கர சைக்கிள்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வீடு புனரமைப்புத் திட்ட ஆணைகள், புதிய வீட்டிற்கான ஆணைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முத்தமிழறிஞர்" கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன், சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 305 மாணவர்களுக்கும் மற்றும் லூர்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 309 மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், கொளத்தூர், எவர்வின்மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 148 மாணவர்களுக்கும் மற்றும் டான் பாஸ்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 279 மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், ஜி.கே.எம். காலனி விளையாட்டுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்க்கெட் தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 210 மாணவிகளுக்கும் மற்றும் ஜி.கே.எம். காலனி 12வது தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியைச் சார்ந்த 79 மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இன்று (8.8.2021) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மொத்தம் 1,330 மாணவ, மாணவியர்களுக்கு கல்வித் உதவித் தொகையாக தலா $5,000/- ரூபாயும் மற்றும் கல்வி உபகரணங்கள் என மொத்தம் ரூபாய் 80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜெ.விஜய ராணி, இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.