Honble Chief Minister inaugurated the Scheme - Makkalai Thaedi Maruthuvam and COVID-19 vaccination for One Lakh workers at Krishnagiri District.
"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” மற்றும் “ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்” ஆகிய திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினைச் செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவச் சேவை அளிப்பதைப் பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.