மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “தீபாவளி” வாழ்த்துச் செய்தி
நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்