Showing posts with label Independence Day Message of the Chief Minister.. Show all posts
Showing posts with label Independence Day Message of the Chief Minister.. Show all posts

Wednesday, August 14, 2013

Independence Day Message of the Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி.

    இந்திய திருநாடு ஆங்கிலேயரின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற பொன்னாளான இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர் 
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள் 
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் 
சிந்தனை ஒன்றுடையாள்” 

          என்று மகாகவி பாரதியார் அவர்கள், இந்திய மக்கள் மதம், மொழி, இனம் என்னும் வகையில் வேறுபட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒரே சமுதாயமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை உலகிற்கு பறைசாற்றுகிறார். தாய் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டிட நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில், நாடு முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்றிட வழி வகை செய்தனர். அத்தகைய தியாகச்சீலர்களின் தியாகத்தை போற்றி, அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாடு வளம் பெற நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டும்.



    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும். அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செலுத்துவதுடன், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செவ்வனே செய்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

      சுதந்திரம் என்னும் சொல்லை உரிமை என்று எடுத்துக் கொள்வதை விட கடமை என்று செயல்பட்டால், இந்தியத் திருநாட்டை வல்லரசாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உருவாக்கிடலாம் என்பதனை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.