Showing posts with label Mega Job fair in R.K.Nagar on 17-10-2015. Show all posts
Showing posts with label Mega Job fair in R.K.Nagar on 17-10-2015. Show all posts

Monday, October 19, 2015

Mega Job fair in R.K.Nagar on 17-10-2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணையின்படி, தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இவை மூலம் வேலை வாய்ப்புத் தேடும் தமிழக இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகரில், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் புதிய வண்ணாரப்பேட்டையில் 17.10.2015 அன்று ஒரு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் பங்கேற்க இணையதளம் மூலம் 98049 இளைஞர்கள் பதிவு செய்தனர். இந்த முகாமில், போர்டு இந்தியா லிமிட்டட், ஹுண்டாய் மோட்டார்ஸ், சிம்ஸன் குழுமம், டஃபே, செயின்ட் கோபைன், போலாரிஸ், இன்போஸிஸ், எச் சி எல், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றனர். மொத்தம் 358 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை அளித்தன.

இந்த மாபெரும் முகாமை சிறப்பான முறையில் நடத்த விரிவான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 34 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் பந்தல் போடப்பட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்பபட்டிருந்தன. சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் குடிநீர் வசதி, துப்புரவு வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்தினர். ஆம்பலன்ஸ் வேன்கள், முதலுதவி சிகிச்சை மையங்கள், அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேலை வாய்ப்பு  முகாமுக்கு வந்த மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொதுப்பணித் துறையின் மூலம் பணி நாடுநர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு காக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இம் முகாம் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். போதுமான அளவில் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சென்னை மாநகர் காவல் துறையின் 2600 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அலுவலர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாம் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசுத் துறை செயலர்கள் இம்முகாம் சிறப்பாக நடைபெற மேற்பார்வைப் பணிகளை மேற்கொண்டனர்.

இன்று (17.10.2015) காலை 6 மணியிலிருந்து பதிவு செய்த வேலை வாய்ப்பு நாடுநர்கள் முகாமக்கு வரத்தொடங்கினர். மொத்தம் 58835 பணிநாடுநர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இவர்களுள் 6453 நபர்களுக்கு இறுதி பணி நியமன ஆணைகள் மற்றம் 10642 தற்காலிக பணி நியமன ஆணைகள் என ஆக மொத்தம் 17095 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும், திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர 14932 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின்மூலம் வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து 1057 இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெற்ற 5 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு ஊரகத் தொழில்த் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திரு ப மோகன், மாண்புமிகு சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் திருமதி பா வளர்மதி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு பி பழனியப்பன், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநுhல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு எஸ் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பணிநியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

பணிநியமன ஆணைகள் பெற்றவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.