மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில் வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிடவும் எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.
மக்களின் நல்வாழ்விற்காக எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்