Showing posts with label Precautionary Actions to Avoid Flood Situation Due to Rain. Show all posts
Showing posts with label Precautionary Actions to Avoid Flood Situation Due to Rain. Show all posts

Wednesday, September 11, 2013

Precautionary Actions to Avoid Flood Situation Due to Rain.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 11.9.2013 

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தை ஒட்டிய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (11.9.2013) எனது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் திரு. ஆர். விஸ்வநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு திரு. என்.டி. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் திரு. டி.எஸ். ஸ்ரீதர், வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில், சாலைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும்; சுரங்கப் பாதைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும்; எந்த நிலைமையையும் எதிர்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

1. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

2. நீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், மின்சார கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. கழிவுநீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையில், போதுமான ஜெனரேட்டர்களை இருப்பில் வைத்துக்கொள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நகராட்சி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

6. சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், நெரிசல் மிகுந்த சாலைகளில் தேங்கும் நீரை உடனடியாக கனரக பம்பு செட்டுகள் மூலம் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. நீரினால் பரவும் நோய்களான டெங்குக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படா வண்ணம் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முழுவீச்சில் மேற்கொள்ளும். இதற்கென போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

8. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குகைப் பாதையில் நீர் தேங்காதவாறு தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குத் தேவையான கனரக பம்பு செட்டுகளை தயார் நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வைத்துக் கொள்ளும்.

9. எந்த நிலையையும் எதிர்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாராக உள்ளது.

10. வடபழனி சந்திப்பு, ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அளவிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

11. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பொதுப் பணித் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

12. கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதாலும்; கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதையும் கருத்தில் கொண்டு, வீராணம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பொதுப் பணித் துறையினரால் தனிக் கவனம் செலுத்தப்படும். காவேரிக் கரையோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்வர்.

13. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12.9.2013) விடுமுறை அளிக்கப்படும். நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசி தேர்வுக்குப் பின்னர் நடத்தப்படும்.

      சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நேற்று இரவு பெய்த மழை காரணமாக எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. வெள்ளத்தினால் இனி ஏதேனும் பாதிப்பு ஏற்படின் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

     வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க ஏதுவாக சென்னை, வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 1070 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும், சென்னை மாநகராட்சியில் 1913 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும், இதர மாவட்டங்களில் 1077 என்ற எண் கொண்ட கட்டணமில்லா தொலைபேசியும் செயல்படும்.

    எந்த நிலையையும் எதிர்கொள்ள எனது தலைமையிலான அரசு தயாராக உள்ளது என்பதையும், வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் களைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும், மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள எனது தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்