As per the instructions of the Honble Chief Minister, the Honble Minister for Hindu Religious and Charitable Endowments chaired a review meeting of the Department.
செய்தி வெளியீடு எண்:099
நாள்:19.05.2021
இந்து சமய அறநிலையத்துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (18.05.2021) இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துறை அலுவலர்களுடன் நடத்திய ஆய்வில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
1. திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுதல்.
2. திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்தல்
3. திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிடுதல். (Publishing)
4. திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றுதல் (Uploading).
5. திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்படுதல்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையர் நிர்வாகம், திருமதி பெ.இரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமதி ந.திருமகள், இணை ஆணையர்கள், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34.