மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கடந்த 5.08.2021 அன்று வேலூர் மாவட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் உணவுப் பொருள் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது விவசாயிகளிடமிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மகசூலைக் காட்டிலும் மிக அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் சில சமயங்களில் நெல் மூட்டைகள் லாரிகளில் கொண்டுவரப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வராமலேயே, நேரடியாகச் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புகாரின் மீது மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களி உத் "டி, இணை மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர்கள் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள சிறுகரம்பூர், தத்தாவாடி மற்றும் கூரம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இணை மேலாண் இயக்குநரின் முதற்கட்ட விசாரணையில் சிறுகரம்பூர், தத்தாவாடி மற்றும் கூரம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நில உடைமை ஆவணங்களைச் சரியாக ஆய்வு செய்யாமல் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் அதிகபட்சமாகக் கிடைக்கக் கூடிய நெல் மகசூலைக் காட்டிலும் பல மடங்கு கூடுதலான அளவு நெல் ஒரு சில நபர்களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே இத்தகைய தவறுகளுக்குக் காரணமான வேலூர் மண்டலத்தைச் சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகப் பணியாளர்களான மண்டல மேலாளர், துணை மேலாளர் (கணக்கு), 3 கண்காணிப்பாளர்கள் மற்றும் 3 பட்டியல் எழுத்தர்கள் என மொத்தம் 8 நபர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த நெல்லை எளிதில் விற்பனை செய்து பயனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.