பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள் சென்னை மாவட்ட கலைப்போட்டிகள்
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான கலைகளில் ஈடுபடும் வகையில் பல கலைகளில் பயிற்றுவிக்கிறது. சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக, குழந்தைகளிடையே மறைந்து கிடக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில், போட்டிகள் நடத்தியும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கிடையே மாநிலஅளவில் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. 9-12, 13-16 வயது வகைகளில் முதல் பரிசு பெற்ற சிறார்கள் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் சவகர் சிறுவர் மன்றச் செலவுகளிலேயே கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/- இரண்டாம் பரிசாக ரூ.7,500/- மூன்றாம் பரிசாக ரூ.5,000/- மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறந்த தேதி (Birth Certificate / Bonofide ) சான்றிதழ் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வயது வகைக்கும், ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்சம் 5 குழந்தைகள் ஒரு பள்ளியிலிருந்து அனுமதிக்கப்படுவர். பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய போட்டிகள் 5-8, 9-12 வயது வகை மாணவ, மாணவியருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், 13-16 வயது வகை மாணவ, மாணவியருக்கு பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரையிலும், ஓவியப் போட்டிகள் அனைத்து வயது பிரிவு மாணவர்களுக்கும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்,
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. மாவட்ட போட்டியில் 9-12, 13-14 வயது வகைப் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாணவர்களுக்கிடையே பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் அரசின் செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.
இப்போட்டிக்கான விதிமுறைகள்
1. பரதநாட்டியம் பரதநாட்டியம்
பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
2. கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை)
தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக்கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
3. குரலிசை
கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், குழுப்பாடல்கள், அனுமதியில்லை. குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.
4. ஓவியம்
40X30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.
5. வயது விவரம்
(1.6.2013 அன்று உள்ளபடி 16 வயது)
அ. 5 முதல் 8 வயது பிரிவு – 1.6.2005 முதல் 31.5.2008 வரை
ஆ. 9 முதல் 12 வயது பிரிவு - 1.6.2001 முதல் 31.5.2005 வரை
இ. 13 முதல் 16 வயது பிரிவு – 1.6.1997 முதல் 31.5.2001 வரை
மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
044- 28192152, 29103195
அரசுச் செயலாளர் / ஆணையர்(பொ)