Wednesday, November 11, 2015

CM Statement on Administrations to gear up for rains

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றியது. மேலும், சாலைகளில் விழுந்துகிடந்த 125 மரங்கள் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் தீபாவளிக்காக பல்வேறு பொருள்களை வாங்கும் கடைவீதிகளில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியிலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகரில் மழை நிவாரணப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்

திருமதி பா வளர்மதி, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், இஆப மற்றும் உயர் அதிகாரிகள் மழைநீரை அகற்றும் பணிகளைப் மேற்பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகிலேயே நிலை கொண்டு மாலை 8.45 மணியளவில் கரையை கடந்தது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவில் மழை பெய்யும் என்றும் வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரளவிற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மணிக்கு 45கி மீ முதல் 55 கி மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

இன்று (9.11.2015) காலை முதல் கடலூர் மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக இன்று காலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. மாலையிலிருந்து படிப்படியாக மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருத்தாச்சலம் வட்டத்திலுள்ள வடக்கு வேலூர் கிராமம் மழை நீரால் சூழப்பட்டதால் 150 குடும்பங்கள் மேடான பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரையோரங்களில் வாழும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நிவராணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து செல்லும் போது திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அனுப்ப உத்தரவிட்டதின் பேரில் கடலூர் மாவட்டத்திற்கு திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திரு பிரதீப் யாதவ் இ.ஆ.ப, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திரு ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு மஞ்சுநாதா இ.கா.ப அவர்கள் கடலூரில் முகாமிட்டுள்ளார்.

Monday, November 9, 2015

Greeting message of the Honble Chief Minister on account of Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “தீபாவளி” வாழ்த்துச் செய்தி

நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.



தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Friday, November 6, 2015

Statement From the Health and Family Welfare Department

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

547 சிறப்புப்பிரிவு உதவிமருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் அறிவிப்பு:-

2012–ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன் முறையாக, மருத்துவப் பணியாளர்களை தேர்வுசெய்ய, மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தால் மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் இதுவரை 14,208 மருத்துவர் மற்றும் இதரபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-14-ஆம் ஆண்டில் 3015 உதவிமருத்துவர் பணியிடங்களும், 2014-15 ஆம் ஆண்டில் 2645 உதவிமருத்துவ அலுவலர்களின் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவ நிலையங்களில் 34 சிறப்புபிரிவுகளில் காலியாகவுள்ள 547 உதவிமருத்துவர் (Assistant Surgeon in 34 different Specialities) பணியிடங்களை விரைவாக நிரப்ப ஏதுவாக வாக்-இன் (Walk-in selection process) தேர்வு முறை என்ற எளிய முறையில் சிறப்புப்பிரிவு பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 547 சிறப்புப்பிரிவு உதவி மருத்துவர்களை நியமிக்க 25.10.2015 அன்று விரிவான அறிவிப்பினை www.mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 16.11.2015 வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (Walk-in selection process)மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு, நடைமுறையிலுள்ள இடஒதுக்கீடு விதிமுறைகளுக்குட்பட்டு வாக்-இன் (றுயடம-in ளநடநஉவiடிn யீசடிஉநளள) தேர்வுமுறையின் மூலம் காலியாக உள்ள 547 சிறப்புப்பிரிவு மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவரும் 16.11.2015-க்குள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.

Communique of Finance Department

FINANCE (WAYS AND MEANS - II) DEPARTMENT

Government of Tamil Nadu has announced the sale of 10 year securities in the form of Stock to the Public by auction for an aggregat e amount of Rs.1200.00 Crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on November 10, 2015. Competitive bids between 10.30 A.M. and 12.00 P.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on November 10, 2015.

 K. SHANMUGAM,
Principal Secretary to
 Government of Tamil Nadu,
 Finance Department, Chennai-9


Free Training for TNPSC Group II Examination

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் TNPSC Group-II தேர்விற்கு இலவச பயிற்சி

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி -I, தொகுதி-II தொகுதி IV, கிராம நிர்வாக உதவியாளர்), IBPS தேர்வுகள், ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், இவ்வட்டங்களில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளன.

 தற்போது TNPSC Group-II (A) ல் உள்ள Personal Clerk, Assistant, Planning Junior Assistant, Lower Division Clerk and Junior Co-Operative Auditor ஆகிய பணிகளுக்கான 1947 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11/11/2015 ஆகும். இத்தேர்விற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும், வாரம் ஒருமுறை தேர்வு மற்றும் பயிற்சி இறுதியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 சி.சமயமூர்த்தி,
 இயக்குநர். வேலைவாய்ப்பு மற்றும்
 பயிற்சித்துறை, இயக்ககம், சென்னை-32