செய்தி வெளியீடு எண்:279
நாள்: 16.06.2021
செய்தி வெளியீடு
Honble Chief Minister handed over financial assistance to the children who have lost their parents to COVID-19
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்கள்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு, கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும் தந்ைத அல்லது தாய்க்கு 3 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 29.5.2021 அன்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது.
அவற்றில் முக்கியமான நிவாரண உதவிகளான கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2021) தலைமைச் செயலகத்தில், 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் வழங்கினார்கள்.
மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்ைத அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கிடும் வகையில், பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் தந்ைத / தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் திரு.ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9