Wednesday, September 23, 2015

Bakrid Festival Greetings message from CM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.



இத்தியாகத் திருநாளில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள், எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும், தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று கூறி, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


No comments :

Post a Comment