Wednesday, September 30, 2015

Statement of the Honble Chief Minister on World Blood Donor Day

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தி

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு 8,63,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ரத்த வங்கிகள் மூலம் மட்டும் 3,50,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளில் பெறப்படுகின்ற மொத்த ரத்த அலகுகளில் 99 விழுக்காடு தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் பெறப்படுகின்றன. இதன் காரணமாக தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4118 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஒரு ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும், இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது.

நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காத்திடவும், பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரத்த தானம் செய்திடுவோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!!

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


No comments :

Post a Comment