496 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் அக்டோபர்’5ல் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’14-ல் வாக்குப்பதிவு மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 15 இதர வகை கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுடன் 335 கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காலி இடங்கள் ஆகியவற்றிற்கான தேர்தலும் அக்டோபர் ’14- ஆம் தேதி அன்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’5-ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு.ம.ரா.மோகன், இ.ஆ.ப., (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :-
161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் 161 தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல்
தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 9 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநுhல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம், கதர் கிராமத் தொழில்வாரிய முதன்மை செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம் மற்றும் மீன்வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 சங்கங்கள் ஆக 161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், இவர்களில் இருந்து 161 தலைவர் மற்றும் 161 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் ‘5-ஆம் தேதியும், வாக்குப்பதிவு அக்டோபர்’14-ஆம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் அக்டோபர் ‘19 ஆம் தேதி அன்று நடைபெறும்.
இந்த 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 311 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும் , 477 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
335 கூட்டுறவுச் சங்கங்கங்களில் காலி இடங்கள்
இது தவிர, 335 கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழுவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள 424 உறுப்பினர்கள் மற்றும் 79 தலைவர் மற்றும் 53 துணைத்தலைவர் ஆகிய காலி இடங்களுக்கான தேர்தல்களும் இதே தேர்தல் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 05.10.2015 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தாக்கல் செய்யலாம். மறுநாள் 6.10.2015 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.
வேட்புமனு திரும்பப்பெறுதல்
தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 07.10.2015 காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 14.10.2015 அன்று காலை 8.00 மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை
வாக்குகள் எண்ணும் பணி 15.10.2015 அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தலைவர், துணைத்தலைவர் தேர்தல்
தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு 15.10.2015 அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19.10.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தொடர்புடைய தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின் வலைதளம் www.coopelection.tn.gov.in-ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு. ம.ரா. மோகன், இ.ஆ.ப. (ஓய்வு) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments :
Post a Comment