Monday, June 21, 2021

CM Handed Over Cash Incentive of Swordsman Ms.Bhavani Devi.

 Tamil Nadu Honble Chief Minister handed over cash incentive of the swordsman Ms Bhavani Devi who is qualified for the Olympics, Japan to her mother in the function held at TANGEDCO, Head Quarters, Chennai

செய்தி வெளியீடு எண்‌:306

நாள்‌: 20.06.2021

ஜப்பானில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்களுக்கு 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

தமிழகத்தைச்‌ சேர்ந்த செல்வி பவானி தேவி அவர்கள்‌, தமிழகத்தின்‌ பாரம்பரிய கலையான வாள்வீச்சில்‌ பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்‌. அவரின்‌ ஊக்கத்தினையும்‌, விடாமுயற்சியினையும்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தில்‌ "விளையாட்டு அலுவலர்‌" பதவி வழங்கப்பட்டுள்ளது.


செல்வி பவானி தேவி அவர்கள்‌ தற்போது ஐப்பான்‌ நாட்டின்‌, டோக்கியோ மாநகரில்‌ நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக்‌ போட்டியில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌. இவர்‌ இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்‌ வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்மணி ஆவார்‌. அவர்‌ தேவையான பயிற்சிகள்‌ பெற அனைத்து உதவிகளையும்‌ தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர்‌ தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில்‌ பயிற்சி பெற்று வருகிறார்‌. மேலும்‌ சில பயிற்சிகள்‌ பெற செல்வி பவானி தேவி அவர்கள்‌ தமிழ்நாடு அரசிடம்‌ 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி கோரியிருந்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, செல்வி பவானி தேவி அவர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இன்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, 5 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம்‌ வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. வி. செந்தில்‌ பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. தயாநிதி மாறன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ராஜேஷ்‌ லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு. தர்மேந்திர பிரதாப்‌ யாதவ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inspected Preparedness Measure to Counter Possible Third Wave

  Honble Chief Minister inspected the paediatric COVID-19 ward set up at the Institute of Child Health and Hospital for Children, Egmore, Chennai as a preparedness measure to counter a possible third wave.

செய்தி வெளியீடு எண்‌:309

 நாள்‌:20.06.2021

செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பல்வேறு தொடர்‌ நடவடிக்கைகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதன்‌ காரணமாக, மாநிலத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ தாக்கம்‌ வெகுவாகக்‌ குறைந்து, நோய்த்‌ தொற்று கட்டுப்பாட்டில்‌ உள்ளது.

இந்நிலையில்‌, கோவிட்‌ தொற்றின்‌ மூன்றாவது அலையைச்‌ சமாளிப்பதற்கான ஆயத்தப்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (20.6.2021) சென்னை எழும்பூரில்‌ உள்ள அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்‌ குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன்‌ கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero Delay) குழந்தைகள்‌ கொரோனா பராமரிப்பு மையம்‌ அமைக்கப்பட்டுள்ளதைப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும்‌ மருத்துவ சிகிச்சை வசதிகள்‌ குறித்து மருத்துவர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌.



இம்மையத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்‌ பிரிவையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌. இப்பிரிவுகளில்‌ குழந்தைகளுக்குத்‌ தேவையான அனைத்து மருத்துவக்‌ கருவிகளும்‌, ஆக்சிஜன்‌ வசதிகளும்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.என்‌. நேரு, மாண்புமிகு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு. க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு. எ.வ. வேலு, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. இ. பரந்தாமன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ திரு. ககன்தீப்‌ சிங்‌ பேடி, இ.ஆ.ப., மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌ டாக்டர்‌ நாராயண பாபு, குழந்தைகள்‌ நல மருத்துவமனை இயக்குநர்‌ டாக்டர்‌ எழிலரசி ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

TN Ministers and MLA Inspected TNSCB Project Sites in Chepauk

 Honble Minister for Rural Industries, Member of Parliament, Chennai Central constituency and MLA, Chepauk-Thiruvallikeni constituency inspected the Tamil Nadu Slum Clearance Board project sites.

செய்தி வெளியீடு எண்‌:310

 நாள்‌:20.06.2021

செய்தி வெளியீடு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின்‌ சென்னை--சேப்பாக்கம்‌ சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ்‌ காலனி, சிந்தாதிரிப்பேட்டை மற்றும்‌ நாவலர்‌ நெடுஞ்செழியன்‌ நகர்‌ அடுக்குமாடிக்‌ குடியிருப்பு திட்டப்பகுதிகளில்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால்‌ சேப்பாக்கம்‌ திட்டப்பகுதியில்‌ 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின்‌ கீழ்‌ புதிய குடியிருப்புகள்‌ கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.தயாநிதி மாறன்‌ மற்றும்‌ சேப்பாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களுடன்‌ இணைந்து இன்று (20.06.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.



மனிதக்கழிவினை மனிதன்‌ அகற்றும்‌ அவல நிலையினை மாற்ற முன்மாதிரியாக சேப்பாக்கம்‌ தொகுதியில்‌ உள்ள கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில்‌ நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றும்‌ பணியினை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌, சேப்பாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்கள்‌.

மேலும்‌, சிதிலமடைந்த நிலையில்‌ கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில்‌ உள்ள 302 குடியிருப்புகளையும்‌, காக்ஸ்‌ காலனி திட்டப்பகுதியில்‌ உள்ள 84 குடியிருப்புகளையும்‌, நாவலர்‌ நெடுஞ்செழியன்‌ நகர்‌ திட்டப்பகுதியில்‌ உள்ள 256 குடியிருப்புகளையும்‌ மற்றும்‌ சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில்‌ உள்ள 136 குடியிருப்புகளையும்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌. இந்த ஆய்வின்போது சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி மக்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன்‌, ஒவ்வொரு குடியிருப்பும்‌ 400 சதுர அடி பரப்பளவில்‌ வரவேற்பறை, உறங்கும்‌ அறை, சமையலறை தனித்தனியே குளியலறை மற்றும்‌ கழிவறை, மின்தூக்கி (Lift), ஜெனரேட்டர்‌ ஆகிய வசதிகளை உள்ளடக்கிய புதிய குடியிருப்புகளை கட்டித்தர மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

தெற்கு கூவம்‌ ஆற்றுச்சாலையில்‌ சுகாதாரமற்ற சூழ்நிலையில்‌ வசிக்கும்‌ மக்களின்‌ கோரிக்கையினை பரிசீலித்து நிரந்தரமான மாற்றுக்குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இந்த ஆய்வின்‌ போது வாரிய தலைமைப்பொறியாளர்‌ திரு.இராம.சேதுபதி அவர்கள்‌, கண்காணிப்பு பொறியாளர்‌ திரு.அ.செல்வமணி, நிர்வாகப்பொறியாளர்‌ திரு.சி.சுடலை முத்துகுமார்‌ உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inaugurated Educational Programmes for Students

 Honble Chief Minister inaugurated the educational programmes for the students studying in I to XII classes though Kalvi TV Channel in the function held at Anna Centenary Library.

செய்தி வெளியீடு எண்‌:298

 நாள்‌: 19.06.2021

செய்தி வெளியீடு

அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி, கல்வித்‌ தொலைக்காட்சியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வியை ஊக்குவிக்கும்‌ வண்ணமாக, அம்மாணவர்களுக்கு அரசு, பாடநூல்களை வழங்கி வருகிறது.

2021- 2022ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்‌ சேர்க்கை தமிழ்நாடு முழுவதும்‌ சிறப்பாக நடைபெற்று வரும்‌ நிலையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (19.6.2021) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்களை வழங்கியும்‌, கொரோனா பெருந்தொற்று பரவல்‌ காரணமாக பள்ளி செல்ல இயலாமல்‌ இருக்கும்‌ மாணவர்கள்‌, வீட்டில்‌ இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல்‌ 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும்‌ உரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வித்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்கள்‌. இத்திட்டம்‌ சுமார்‌ 292 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படுகிறது. இதனால்‌, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 69 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.



அதனைத்‌ தொடர்ந்து, அம்மாணவ, மாணவியர்களுடன்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ நலம்‌ விசாரித்து, அவர்களுக்கு பேனா மற்றும்‌ சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ. வேலு, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு.அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை- 9

Friday, June 18, 2021

Applications Invited for State Awards on Independence Day, 2021

செய்தி வெளியீடு எண்‌:287

 நாள்‌:17.06.2021

செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌.30.06.2021.

 Commissionerate for Welfare of the Differently Abled - Applications invited for State Awards under various categories to be presented on Independence Day, 2021 - Last date 30th June 2021


மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களை தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ ஊக்குவித்து  கெளரவிக்க ப்படுவதால்‌. அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள  மாற்றுத்‌ திறனாளிகளுக்கான மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌ மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌, என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, கீழ்காணும்‌ விருதுகள்‌ சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2021 அன்று வழங்கப்படவுள்ளது.

  • மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலனுக்காக அரும்பபணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு மிக அதிக அளவில்‌ வேலைவாய்ப்பு அளித்த தனியார்‌ நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்.
  • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆணையர்.

மேற்காணும்‌ விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, 

மாற்றுத் திறனாளிகள் னால ஆணையர், 

மாற்றுத்திறனாளிகள் னால ஆணையரகம் , 

எண்‌.5, லேடி வெலிங்டன்‌ கல்லூரி வளாகம்‌, 

காமராஜர்‌ சாலை, 

சென்னை - 5 

அல்லது 

சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன்‌ 30.06.2021 அன்று பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடம்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது. 

மேலும்‌, விண்ணப்பப்‌ படிவங்களை https://awards.tn.gov.in/  https://awards.tn.gov.in/register.php என்ற வலைத்தளத்திலும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தேர்வுக்‌ குழுவினரால்‌ தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும்‌ விருதாளர்களுக்கு விருதுகள்‌ சுதந்திர தின விழா நிகழ்வில்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.

DR. A.P.J. அப்துல் கலாம் விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2021.

கல்பனா சாவ்லா விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 30.06.2021. 

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9