Tamil Nadu Honble Chief Minister handed over cash incentive of the swordsman Ms Bhavani Devi who is qualified for the Olympics, Japan to her mother in the function held at TANGEDCO, Head Quarters, Chennai
செய்தி வெளியீடு எண்:306
நாள்: 20.06.2021
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த செல்வி பவானி தேவி அவர்கள், தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் "விளையாட்டு அலுவலர்" பதவி வழங்கப்பட்டுள்ளது.
செல்வி பவானி தேவி அவர்கள் தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற செல்வி பவானி தேவி அவர்கள் தமிழ்நாடு அரசிடம் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், செல்வி பவானி தேவி அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments :
Post a Comment