Honble Chief Minister inspected the paediatric COVID-19 ward set up at the Institute of Child Health and Hospital for Children, Egmore, Chennai as a preparedness measure to counter a possible third wave.
செய்தி வெளியீடு எண்:309
நாள்:20.06.2021
செய்தி வெளியீடு
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கோவிட் தொற்றின் மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (20.6.2021) சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero Delay) குழந்தைகள் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.
இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள். இப்பிரிவுகளில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு, குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எழிலரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments :
Post a Comment