Saturday, November 30, 2013

Honble Chief Minister on Diesel Price Hike.

      சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தையும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும் சுட்டிக் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாதாமாதம் உயர்த்திக் கொண்டே வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது எவ்வித காரணத்தையும் சுட்டிக் காட்டாமல் டீசல் விலையை இன்று முதல் லிட்டருக்கு 50 பைசா என உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  டீசல் விலையை மாதாமாதம் ஏற்றிக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதிலிருந்து இதுவரை 11 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



       விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இதற்கு நேர்மாறான போக்கை மத்திய அரசு கடைபிடிப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் ஆகும். இந்த விலை உயர்வு முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுகின்ற செயலாகும்.

      இந்த விலை உயர்வின் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் பன்மடங்கு உயரக் கூடும். இது மட்டுமல்லாமல், தனியார் பேருந்துகளின் கட்டணமும், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோரை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணமும் அதிகரிக்கும். இதன் விளைவாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

      மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்; சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் ஓரளவு நிலையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும்; இந்த டீசல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்

No comments :

Post a Comment