பொதுத் (தேர்தல்கள்-1) துறை செய்தி வெளியீடு
1.1.2014-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை கீழ் கண்ட அட்டவணைப்படி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் | 01-10-2013 |
பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த மனுக்கள் அளிக்க கால அவகாசம் | 01-10-2013 முதல்
31-10-2013 வரை |
கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகத்தைப் படித்து பெயர்களைச் சரிபார்த்தல் | 02-10-2013 மற்றும்
05-10-2013 |
மனுக்கள் பெற சிறப்பு முகாம் நாட்கள் | 06-10-2013 (ஞாயிற்றுக்கிழமை),
20-10-2013 (ஞாயிற்றுக்கிழமை)
மற்றும்
27-10-2013 (ஞாயிற்றுக்கிழமை) |
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் | 06.01.2014 |
1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல்/திருத்தல்/ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றல் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்யப்படவேண்டியிருந்தால் பெயர் சேர்ப்புக்காக புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். காகிதப்படிவத்தில் நிரப்பி அளித்தோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் அதிக அளவில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட ஏதுவாக தனியார் இணையதள மையங்களோடு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ள நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2014 அன்று வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-க்கு முன்னோட்டமாக வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 58761-லிருந்து 60418-ஆக உயர்ந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம், 2013-ன் இறுதிப்பட்டியல்கள் வெளியிடப்பட்ட 10.01.2013 அன்றுள்ளபடி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,15,69,062 (ஆண்கள் 2,58,56,061 ; பெண்கள் 2,57,10,567 மற்றும் இதரர் 2,434) ஆகும். 01.10.2013 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்போது தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை தெரியவரும்.
இன்று (25.092013) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி கலந்துரையாடினார். அக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம், 2014-ன் கால அட்டவணை குறித்து அவர்களிடம் விளக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டது.
வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத பாகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலிலுள்ள தவறுகளை கண்டறிவதிலும் அவற்றை சரிசெய்வதிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களோடு இணைந்து செயலாற்றுவர். ஓவ்வொரு கட்சியும் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களின் விவரங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும்.
தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழ் நாடு