மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (6.11.2013) கோயம்பேடு பணிமனையில், சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. (K.V.) உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள்.
விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23.085 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாம் வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் புனித தோமையார்மலை வரையிலான 21.961 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 14,600 கோடி ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலைக் கடனாக 5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும், சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகிதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து (Japan International Cooperation Agency) கடனாகப் பெறப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மொத்தம் 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரயில் பெட்டித் தொடர்கள் பிரேசில் நாட்டில் உள்ள ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயிலில் குளிர்ச்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றை மெட்ரோ ரயில் தொடரின் பெட்டிக்குள் சென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பார்வையிட்டார்கள்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கோயம்பேடு பணிமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. (K.V.) உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் குழு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் திரு க. இராஜாராமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டம்) திரு ஆர். ராமநாதன், இயக்குநர் (இயக்கம்) திரு எல். நரசிம் பிரசாத், இயக்குநர் (நிதி) திருமதி விஜயா காந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.