Wednesday, January 1, 2014

Honble Chief Minister Statement on EB Settlement.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அவர்களின் அறிக்கை – 1.1.2014 

      தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்; சுமுகமான தொழில் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதிலும்; தொழிலாளர் சட்டதிட்டங்களின்படி அவர்களுக்குரிய பயன்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதிலும்; புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதிலும் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.


     பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதில் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் காலத்தே அளித்து வருகிறது.

     அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன்.அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று 16.12.2011 அன்று அமைக்கப்பட்டது.

    இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கீழ்க்காணும் ஊதிய உயர்வினை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்படி:

1) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும்.

2) இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13,160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

3) பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

4) தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் 22.7.2013-ன்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.


5) காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு (Stagnation increment) வழங்கப்படும்.
 
6) தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் (Scale of Pay and Grade Pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.


7) தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம் (Allowances and Special pay) மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.

8) தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு (Increment) தொடர்ந்து வழங்கப்படும்.

9) பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும். பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தற்போது ஓராண்டிற்கு குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் (ஊதியம் மற்றும் தர ஊதியம்) வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.

10) இந்த ஊதிய உயர்வு 1.12.2011 முதல் நடைமுறைக்கு வரும். 1.12.2011 முதல் 31.12.2013 வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும்.

11) இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் 1.12.2011 முதல் 30.11.2015 வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.

     இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70,820 பணியாளர்கள் மற்றும் 10,160 அதிகாரிகள் என மொத்தம் 80,980 பணியாளர்கள் பயன் பெறுவர்.

     இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்.

     எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, அவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழிவகுக்கும்.


 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர் 

Monday, December 30, 2013

New Year Greetings 2014 from the Hon'ble Chief Minister.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஜெ ஜெயலலிதா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 

     புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.



     தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில் வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிடவும் எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

     மக்களின் நல்வாழ்விற்காக எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தைப் படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர் 

CM Statement on Pongal Gift Package to Ration Card Holders.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 31.12.2013 

      தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

      இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், வறட்சி நிலைமை, பயிர்கள் பாதிப்படைந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்; கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

      இதே போன்று, வரும் 2014-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அரசுக்கு 281 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

      என்னுடைய இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும்.

 ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர் 

Honorable Tamilnadu CM launches New Buses.

        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளைத் துவக்கி வைத்தார்கள். மேலும், 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்கள்.



Development Measures and Infrastructure of Industrial Training Institutes (ITIs) .

     Press Release of the Honble Chief Minister on the Development Measures and Infrastructure of Industrial Training Institutes (ITIs)  in Tamil Nadu - dated 29-12-2013 

      தொழில் திறன் மற்றும் அறிவுத் திறன் ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை உருவாக்கும் முக்கிய காரணிகளாகத் திகழ்வதாலும், திறன் பெற்ற பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

      தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes-ITI) அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவுத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி பெறுவோருக்கான பாடத் திட்டத்தில் மொழித் திறன், கணினித் திறன் மற்றும் மென்திறன் பயிற்சி குறித்த பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களை பயிற்றுவிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை ஏற்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஆய்வகங்களுக்காக தேவைப்படும் இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டவும், இந்த ஆய்வகங்களுக்குத் தேவையான மென் பொருள் மற்றும் கணினி பொறிகள் வழங்கவும், பயிற்சி அளிக்க தேவையான பயிற்றுநர்களை நியமிக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்hர்கள்.

     முதற்கட்டமாக, நாகலாபுரம், செக்கானூரணி, ஆண்டிப்பட்டி (மகளிர்), அரக்கோணம், திண்டுக்கல் (மகளிர்), புதுக்கோட்டை, திருப்பூர், மேட்டூர், தர்மபுரி, அரியலூர், திருச்செந்தூர், குன்னூர், விருதுநகர், வேலூர், திண்டுக்கல், தாராபுரம், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், வடசென்னை, அம்பத்தூர், கிண்டி, செங்கல்பட்டு, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கடலூர், கரூர் (மகளிர்), கடலூர் (மகளிர்), வேப்பலோடை, ராதாபுரம், அருப்புக்கோட்டை, திருவையாறு மற்றும் போடி ஆகிய 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       இந்த ஆய்வகங்களை அமைத்திட ஏதுவாக கட்டடங்கள் புனரமைப்பு மற்றும் மின் இணைப்பிற்hக 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இந்த ஆய்வகங்களின் உள்கட்டமைப்பிற்கென 5 கோடியே 72 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய், பயிற்றுநர்களுக்கான ஊதியமாக 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், இணையதளத்திற்கான மாதாந்திர கட்டணமாக 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஆய்வகங்களுக்காக 44 பயிற்றுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யவும் ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.


வெளியீடு:- இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9