மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் , அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவை மையங்கள் மூலமாக, இதுவரை 13,28,647 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் ஆகிய 281 இடங்களில் உள்ள அரசு இ- சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் மேற்கூறிய அரசு இ- சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்கு பதிவு எண்ணைக் காண்பித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ. 40/- கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ஆதார் எண் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணைக் காண்பித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.30/- கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவரை 3,77,153 நபர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம் 38,014 நபர்கள் சொத்து வரியினை செலுத்தி உள்ளனர். இதுவரை 15,83,97,169 ரூபாய் சொத்து வரி இம்மையங்கள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்