Wednesday, August 21, 2013

Fund For Infrastructure Development of Sports.

Sanction of fund for infrastructure development of Sports - dated 21 August 2013

        விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்கும் உரிய முனைப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

       முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பத்து விளையாட்டுகளில் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடையே இந்தப் போட்டிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த போட்டிகளை மேலும் வலுப்படுத்தி, போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டு போட்டிகளைப் (National Games) போன்று தமிழகத்தில் “முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்“ ஆண்டுதோறும் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

      இப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இப்போட்டிகளுக்கென 8 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

        இந்தக் கோப்பைக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து. ஹாக்கி, கால்பந்து, கபாடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகியவைகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 204 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என ஒரு மண்டலத்திற்கு 1,632 பேர்கள் இவ்விளையாட்டில் பங்கேற்பார்கள். மொத்தத்தில் 204 பேர் தங்கப் பதக்கமும், 204 பேர் வெள்ளிப் பதக்கமும், 204 பேர் வெண்கலப் பதக்கமும் வென்று அதற்குரிய பரிசுத் தொகையை பெறுவார்கள்.



      விளையாட்டு வீரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையத்தினை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்தொகை புதிய கட்டடம் கட்டுவதற்கும், புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கும் செலவிடப்படும்.

     தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை, தலைமைச் செயலகத்தில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் 50 லட்சம் ரூபாய் செலவில் 2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

     அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும்.
*******
வெளியீடு:- இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 

No comments :

Post a Comment