Showing posts with label CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali.. Show all posts
Showing posts with label CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali.. Show all posts

Monday, October 21, 2013

CM Chaired a Meeting on Bonus Disbursement for Deepavali .

Honble Chief Minister Chaired a Meeting on Bonus Disbursement to the Employees of State PSUs for Deepavali Festival  – 21.10.2013 

     மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

     தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இரா. வைத்திலிங்கம், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



      இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,

1. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

2. கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம்  ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

5. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

6. மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

 எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்