Showing posts with label Special Summary Revision of Electoral Rolls. Show all posts
Showing posts with label Special Summary Revision of Electoral Rolls. Show all posts

Thursday, September 10, 2015

Special Summary Revision of Electoral Rolls


செய்தி வெளியீடு எண்: 440
நாள் : 10.09.2015


பொதுத் (தேர்தல்கள்-1) துறை

செய்தி வெளியீடு

1.1.2016-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2. 15.09.2015 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். elections.tn.gov.in  என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.

3. 05.01.2015 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2015-ன் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 5.62 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.



4. 06.01.2015 முதல் நாளது வரையிலான தொடர் திருத்தக் காலத்தில் 9.25 இலட்சம் படிவம்-6 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன (இவற்றில் 4.20 இலட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் 5.05 இலட்சம் இடம்பெயர்ந்தோர் ஆவர்). இறப்பு, இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு போன்ற காரணங்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரையறைகளுக்குட்பட்டு 3.15 இலட்சம் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.

5. 15.09.2015 அன்று வெளியிடப்படவுள்ள 2016 சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

6. 16.09.2015 மற்றும் 30.09.2015 ஆகிய நாட்களில் கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில், வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் / பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

7. 20.09.2015 மற்றும் 04.10.2015 ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தல்/இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

8. இச்சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் மனுக்கள் அளிக்கும் காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் மாற்றம் செய்யவோ விரும்பும் ஒரு வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 7, 8 மற்றும் 8ஏ ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்:

(1) அலுவலக வேலை நாட்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் / வாக்காளர் பதிவு அதிகாரி / உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

(2) சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.

(3) அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

நமது மாநிலத்தில் தற்போது 28,850க்கும் அதிகமான நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்கள் உள்ளன.

9. பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவேண்டும். உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை / வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம் / ஓட்டுநர் உரிமம் / கடவுச் சீட்டு / தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் சமீபத்திய ரசீது / ஆதார் கடிதம் போன்றவற்றை முகவரிச் சான்றாகச் சமர்ப்பிக்கலாம். வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகல் அளிக்கப்படலாம். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்கவேண்டியது கட்டாயமாகும்.  elections.tn.gov.in/eregistration என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

10. 1.1.2016 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக விண்ணப்பிப்போரை (அதாவது 18-25 வயதிலுள்ள மனுதாரர்கள்)த் தவிர, ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிடவேண்டும். இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலுங்கூட, தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் (அல்லது)  தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம் 6-ன் பாகம் IV-ஐ பூர்த்திசெய்ய வேண்டியது கட்டாயமாகும்.

11. வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்து, ஆனால் அவருடைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்திருந்தால், வட்டாட்சியர்/மண்டல அலுவலகத்தில் படிவம் 001-ல் எப்போதும் விண்ணப்பிக்கலாம்.

12. வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படவேண்டும் - அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டுச் சரிபார்த்து அப்போதே திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6A தபாலில் அனுப்பப்படும்போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்படவேண்டும்.

 தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழ் நாடு


வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9