Showing posts with label Subvention scheme for Short Term Crop Loans. Show all posts
Showing posts with label Subvention scheme for Short Term Crop Loans. Show all posts

Thursday, August 20, 2015

Subvention Scheme for Short Term Crop Loans

செய்தி வெளியீடு எண்: 414
நாள் : 19.08.2015


விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர்க்கடன் வட்டி மானிய திட்டத்தை நடப்பு நிதியாண்டில் 30.6.2015 வரை மட்டும் மத்திய அரசு நீட்டித்து மாற்று திட்டத்தை ஆலோசித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பாக கடிதம் ஒன்று 29.4.2015 அன்று அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து 20.6.2015 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர்க் கடன் வட்டி மானியத் திட்டத்தில், தற்போதுள்ள நடைமுறைகளின்படியே தொடர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி எழுதியுள்ளார்கள். மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்ட இரண்டு மாற்றங்களும் பாதகமானவை என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். முதலாவதாக, வங்கிகள், முன்னுரிமை பிரிவுகளுக்கு அடிப்படையான வட்டி விகிதத்தில் கடன் வழங்க அனுமதித்தல், இரண்டாவதாக, பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்குதல், அதாவது விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை முழுமையாக திரும்பச் செலுத்திய பின்னர், நேரடியாக மானியம் வழங்கும் முறை, தற்போதுள்ள நடைமுறையான வங்கிகளின் கடன் வழங்கும் தகுதிக்கேற்ப வட்டி மானியத்தினை வங்கிகளுக்கு வழங்கும் முறைக்கு மாறுபட்டதாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மேலும் தமது கடிதத்தில், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு உட்படும் வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது, தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதோ, அல்லது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை குறைப்பதோ தேவையற்றதாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இச்சூழ்நிலைகளில் விவசாயிகள் அதிக வட்டியினை முதலில் செலுத்தி, பின்னர் அத்தொகையை, நேரடி மானியம் மூலம் பெறுவது என்பது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ளபடி, விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் கடன் வழங்கப்படும்போதே, விவசாயிகள் வட்டி சலுகைகளைப் பெற்று வருகின்றனர். நேரடி மானியத் திட்டத்திற்கு மாறும்போது, கடனைத் திரும்பச் செலுத்திய பின்னர், மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லாததுடன், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைப்பதிலும், இலக்கினை அடைவதிலும், பொறுப்புடைமையிலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தமது கடிதத்தில், தமிழ்நாடு அரசு, கூட்டுறவுகள் மூலம் வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து 4 சதவிகிதத் தொகையினை, ஊக்க வட்டி மானியமாக மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்துடன் கூடுதலாக வழங்கி வருவதனையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், தமிழ்நாட்டில்

விவசாயப் பெருமக்கள், உரிய காலத்தில் கடனை செலுத்தும்போது, வட்டியின்றி பயிர்க்கடன் பெற்று பெரும்பயன் அடைகின்றனர். நம்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்க வேண்டும் எனில், விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர் கடன் கிடைக்கச் செய்வது அவசியம். எனவே, அடிப்படை நிலவரத்தை கருத்திற்கொள்ளாமல், தற்போதுள்ள நடைமுறையினை மாற்றம் செய்வது, கடும் எதிர் விளைவுகளை உருவாக்கக் கூடும்.

எனவே, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளுக்கான இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து, தொடர்புடைய அனைவரிடமும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் திட்டம் அமையவேண்டும் எனவும் தற்போது, நடைமுறையில் உள்ளவாறே குறுகிய கால பயிர் கடன் வட்டி மானியத் திட்டம் தொடர வேண்டும் எனவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கடிதத்திற்கு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு 3.8.2015 தேதியிட்ட பதில் கடிதத்தில், மத்திய அரசு தற்போதுள்ள வட்டி மானியத் திட்டத்தின்படி மார்ச் 2016 வரை குறுகிய கால பயிர்க் கடன்களுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, மத்திய அரசின் வேளாண்மைத் துறையால் ஒரு குழு அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், இக்குழு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களை மேம்படுத்தவும், வட்டி மானியத் திட்டத்தின் நிதி ஆதாரங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் பரிந்துரைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இப்பொருள் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்வதற்கான விவாதக் குறிப்புகளை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள், தடையில்லாத குறுகிய கால விவசாயக் கடன் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 2014-2015ஆம் நிதி ஆண்டில் 10,36,859 விவசாயிகளுக்கு, ரூ.5,000 கோடி என நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக, ரூ.5,279.91 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2015-2016) 10 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

*****

வெளியீடு:
இயக்குநர் - செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை – 9
நாள்: 19.8.2015