Wednesday, August 14, 2013

Chief Ministers Medal on The Occasion of Independence Day.



சுதந்திர தினத்தையொட்டி, இந்த ஆண்டு 8 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க மாண்புமிகு முதலமைச்சரின் ஆணை! 

     புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குத் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :



திருவாளர்கள் 

1. எம்.குணசேகரன்,
காவல் ஆய்வாளர், கே.கே.நகர் காவல் நிலையம்,
திருச்சி மாநகரம்.

2. இரா.தனராசு,
 காவல் ஆய்வாளர், மத்திய குற்றப் பிரிவு,
 திருப்பூர் மாவட்டம்.

3. சி.ராஜக்குமார் நவராஜ்
 காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தூத்துக்குடி மாவட்டம்.

4. பி.ஆர்.சிதம்பர முருகேசன்
 காவல் ஆய்வாளர், திட்டக்குடி காவல் நிலையம்
 கடலூர் மாவட்டம்.

5. பா.குமார்
 காவல் ஆய்வாளர், விக்கிரவாண்டி காவல் நிலையம்
 விழுப்புரம் மாவட்டம் .

        இதேபோன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் :

திருவாளர்கள் 

1. விஜேந்திரபிடாரி, இகாப.,
காவல் கண்காணிப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்.

2. பெ.கு. பெத்து விஜயன்
 காவல் துணை கண்காணிப்பாளர்,
 தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை,
 தலைமையிடம், சென்னை.

3. கி. ஸ்ரீதரன்
 காவல் உதவி ஆணையாளர்,
 நுண்ணறிவுப் பிரிவு ,
 திருச்சி மாநகரம்.

     விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

வெளியீடு: 
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

Independence Day Message of the Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திர தினத் திருநாள் வாழ்த்துச் செய்தி.

    இந்திய திருநாடு ஆங்கிலேயரின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து சுதந்திரம் பெற்ற பொன்னாளான இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர் 
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள் 
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் 
சிந்தனை ஒன்றுடையாள்” 

          என்று மகாகவி பாரதியார் அவர்கள், இந்திய மக்கள் மதம், மொழி, இனம் என்னும் வகையில் வேறுபட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒரே சமுதாயமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை உலகிற்கு பறைசாற்றுகிறார். தாய் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டிட நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில், நாடு முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்றிட வழி வகை செய்தனர். அத்தகைய தியாகச்சீலர்களின் தியாகத்தை போற்றி, அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்து, நாடு வளம் பெற நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டும்.



    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகத் போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும். அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திட உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செலுத்துவதுடன், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செவ்வனே செய்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.

      சுதந்திரம் என்னும் சொல்லை உரிமை என்று எடுத்துக் கொள்வதை விட கடமை என்று செயல்பட்டால், இந்தியத் திருநாட்டை வல்லரசாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உருவாக்கிடலாம் என்பதனை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

Tuesday, August 13, 2013

Sanction Funds for Tribal Cultural Centre, Nilgiris.

     Sanction of funds for Tribal Cultural Centre, Nilgiris.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டம், இந்தியாவிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நிலவும் இயற்கை எழிலை ரசிப்பதற்காக ஆண்டுதோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

      இம்மாவட்டத்தில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் கொண்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பழங்குடியின மக்களின் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் இம்மாவட்டம் முழுவதும் பிரதிபலிக்கின்றது.

    இம்மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள இயற்கை சூழ்நிலையை மட்டும் ரசிக்காமல், இங்குள்ள மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.



     எனவே பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும், அவர்களது பண்பாட்டினை பாதுகாத்திடும் வகையிலும், அவர்களது கலாச்சாரத்தின் மேன்மையை மக்களிடையே எடுத்துச் செல்வதற்காகவும் ஒரு அரசு சார்ந்த அமைப்பு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் ஒன்றினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையம் பழங்குடியின மக்களின் நலனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து பழங்குடியின மக்களுடைய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திடும் அமைப்பாகவும் செயல்படும்.

     இந்த மையத்தின் மூலம் மலைவாழ் மக்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரே கூரையின் கீழ் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென ஒரு நவீன கலையரங்கம், பொருட்காட்சிக் கூடம், அருங்காட்சியகம் மற்றும் நிலையான விற்பனை அரங்குகளுடன் கூடிய பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம் அமைக்கப்படும்.

     இந்த பண்பாட்டு ஆதார மையத்தை ஒரே சமயத்தில் 984 பேர் அமரக்கூடிய தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடன் 51,881 சதுர அடி பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைப்பதற்கும், இம்மையம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில், தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இம்மையத்தினை கட்டுவதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

   அரசின் இந்த நடவடிக்கை நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தினை உலகறிய செய்ய வழிவகுக்கும்.

வெளியீடு:- இயக்குநர்,செய்தி-மக்கள்தொடர்புத்துறை, சென்னை-9 

Renovation of Paralaiyar Canal.

    Honble Chief Minister sanctioned funds for the renovation of Paralaiyar Canal in Ramanathapuram District

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் தி ட்டம் IAMWARM, உலக வங்கி நிதியுதவியுடன் 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதற்காக 2,082 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 6.69 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க திட்டமிட்டது. இதன் கீழ் இதுவரை 25 மாவட்டங்களில் 4,910 ஏரிகள், 662 அணைக்கட்டுகள் மற்றும் அதன் 8,590 கிலோ மீட்டர் நீர்வழங்கு வாய்க்கால்கள் ஆகியவற்றை புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.



        வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் கிடைக்கும் அதிக அளவு நீர், வைகை நதியின் இணைக் கால்வாயான பரலையாறு கால்வாய்க்கு திருப்பி விடப்படும். இதன் மூலம் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியிலுள்ள ஏரிகள் மிகவும் பயன் பெறும். ஆனால் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் அதிக அளவு நீரினை கொண்டு செல்லும் வகையில் பரலையாறு கால்வாய் இல்லாததால், மிகை நீர் வீணாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த நிலைமையை போக்கி, அதிக அளவு நீரினைக் கொண்டு செல்லும் வகையில், இந்தக் கால்வாய் சீரமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ், 22 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் பரலையாற்று கால்வாயினை மேம்படுத்தி சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

        அரசின் இந்தத் திட்டத்தின் மூலமாக, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில், வறட்சி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள 54 கண்மாய்கள் மூலம் 4,957 ஏக்கர் நிலங்களில் பாசனம் உறுதிப் பெறும். 

Thursday, August 8, 2013

Award Scheme for Students.

Honble Chief Minister Merit Award Scheme for Backward Classes, Most Backward Classes, Denotified Communities and Minority students.