Monday, January 13, 2014

Milad-un-Nabi wishes of the Honble Chief Minister

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின்  மீலாதுன் நபி” திருநாள் வாழ்த்துச் செய்தி 

     அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் “மீலாதுன் நபி” என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இத்திருநாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உண்மையை பேசுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், ஏழை எளியோருக்கு உதவி புரிதல், அனைவரிடத்தும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல், புகழையும் அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல் என்பது இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

    அன்பு இருந்தால் தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

    இப்புனித மிக்க பொன்னாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “மிலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர்

List of Award Winners.

      தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

      விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-

திருவள்ளுவர் விருது :                             கவிஞர் யூசி (தைவான்) 
தந்தை பெரியார் விருது :                     திருமதி சுலோச்சனா சம்பத் 
அண்ணல் அம்பேத்கர் விருது :           பேராயர் முனைவர் எம்.பிரகாஷ் 
பேரறிஞர் அண்ணா விருது :               திரு பண்ருட்டி ச. இராமச்சந்திரன் 
பெருந்தலைவர் காமராசர் விருது : திரு. கி. அய்யாறு வாண்டையார் 
மகாகவி பாரதியார் விருது :              முனைவர் கு. ஞானசம்பந்தன் 
பாவேந்தர் பாரதிதாசன் விருது :     முனைவர் திருமதி. இராதா செல்லப்பன் 
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது :  திரு. அசோகமித்ரன் முத்தமிழ்க்காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது :           பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் 

      மேற்காணும் விருதுகளை 15.1.2014 அன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

       விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்.

Pongal wishes from the Honble Chief Minister.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பொங்கல் திருநாள்” வாழ்த்துச் செய்தி 

      உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

       “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.



“மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ  வழங்கும் குணமுடையோன் விவசாயி” 

        -- என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாக்கிற்கிணங்க, பிறர்வாழ பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்கென “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”; வேளாண் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு; சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், ஏனைய விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்; உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் பயறு வகை, சிறுதளை, விதைப் பைகள் விநியோகம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலான கொள்முதல் விலை; வறட்சி ஏற்படின் உடனடி நிவாரணம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

        பொங்கல் பண்டிகையைத் தமிழர்கள் இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்திட எனது தலைமையிலான அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர்

Friday, January 10, 2014

Pongal Bonus for Public Sector Undertaking Employees.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 10.1.2014 

     நாட்டின் இன்றியமையாத் தேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், குறைந்த விலையில் நிறைவான சேவையை அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டவை பொதுத் துறை நிறுவனங்கள்.

     இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் நன்கு செயல்பட வேண்டுமானால், அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய பயன்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.

     எனவே தான், எனது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 1965 ஆம் ஆண்டு போனஸ் வழங்குதல் சட்டத்தின்படி போனஸ் வழங்கி வருகிறது. போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் வராத பணியாளர்களுக்கு பொங்கல் தினத்தை ஒட்டி, சிறப்பு போனஸ் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் (Ad hoc Bonus) தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


 இதன்படி,

1) தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்களில், 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத கண்காணிப்பு நிலையில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு  2 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

2) 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெறாத ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பு போனஸ் (Ad hoc Bonus) தொகையாக 31.3.2013 அன்று உள்ள ஊதியத்தின் அடிப்படையில், 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.

3) சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட வாரியங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டது போல் 500 ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும்.

    எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மூலம், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாட வழிவகை ஏற்படும்.

ஜெ ஜெயலலிதா 
 தமிழ்நாடு முதலமைச்சர்